இதோ… அதோ… என ஈரான் போர் நிறுத்தம் பூச்சாண்டி காட்டிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர, இன்னும் முடிந்தப்பாடில்லை.
காலக்கெடு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கொடுத்திருந்த காலக்கெடு நேற்று தான் அதாவது ஏப்ரல் 6, 2026.
முதலில், மார்ச் 23, 2026 அன்று ஈரானுக்கு 5 நாள்கள் கெடுவை விதித்தார் ட்ரம்ப்.
அடுத்த மூன்று நாள்களிலேயே (மார்ச் 26), ஐந்து நாள்கள் 10 நாள்களாக நீண்டது. ஏப்ரல் 6-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, ‘இன்னும் 48 மணிநேரம் தான் உள்ளது’ என்று எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்.
நேற்று முன்தினம், நேரத்தையே குறித்துவிட்டார். அந்த நேரம், கிழக்கு நேரம் மண்டலத்தின் படி, நாளை (ஏப்ரல் 7) இரவு 8 மணி. இது இந்திய நேரப்படி, வரும் புதன்கிழமை (ஏப்ரல் 8) காலை 6.30 மணி.
இந்தக் காலக்கெடுக்களுக்கு எல்லாம் ட்ரம்ப் வைக்கும் ஒரே நிபந்தனை ‘ஹார்முஸ் ஜலசந்தி’ திறப்பது தான்.
மையமே ‘ஹார்முஸ் ஜலசந்தி’
ஈரான் போர் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானைத் தாண்டி, ஹார்முஸ் ஜலசந்தியை மையமாக வைத்து இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கியதுமே, ஈரான் அவர்களுக்கு தோதாக எடுத்த புத்திசாலித் தனமான நகர்வு, ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ தான்.
என்னது… அது புத்திசாலித் தனமான நகர்வா… இது உலக நாடுகளையே பாதிக்கிறது தானே… என்று கேட்கிறீர்களா?
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் ஈரானைப் பொறுத்த வரை அவர்களுக்குப் புத்திசாலித்தனமான நகர்வு தான்.

வெறுமனே, அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலைத் தற்காத்து கொண்டிருந்தாலோ, எதிர் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தாலோ, ஈரான் போரை பத்தோடு பதினொன்றாக உலகம் கடந்திருக்கும்.
ஆனால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதும், உலகமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால், ட்ரம்ப் மீது இந்தப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தம் நேரடியாகவும், மறைமுகமாகவும் விழுந்துகொண்டிருக்கிறது.
ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதால், பதிலுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் சொத்துகள், கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு எரிபொருள் கட்டமைப்புகளும் விதிவிலக்கு அல்ல.
கச்சா எண்ணெய்
இதுப்போக, ஒரு மாதத்திற்கும் மேலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களை வைத்திருக்கும் கப்பல்கள் நின்றுகொண்டிருக்கின்றன.
இந்தக் காரணங்களால், உலக அளவில் கச்சா எண்ணெய்களின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.
கச்சா எண்ணெயின் தாறுமாறு ஏற்றம் அமெரிக்க மக்களையும் பாதித்துள்ளது. இதனால், அவர்கள் ட்ரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் தேர்தல் வேறு நடக்க உள்ளது. இந்த அதிருப்தி காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியைக் குறைக்கலாம்.
பிடிக்கவில்லை
இந்தப் போருக்குள் அமெரிக்கா நுழைந்தது ட்ரம்பின் அரசாங்கத்திற்குள் இருக்கும் பலருக்குமே பிடிக்கவில்லை.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோ கென்ட் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு இந்தப் போர் பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
ட்ரம்பிற்கு இத்தனை சிக்கல்கள் வரக் காரணம், அவர் போட்ட சில தப்புக் கணக்குகள் தான்.
ஒன்று, இந்தப் போர் இவ்வளவு காலம் நீடிக்கும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை. ஈரானுக்குள் தாக்குதல் நடத்துவோம்… அந்த நாடு அடிப்பணியும்… நாம் திரும்ப வந்துவிடுவோம் என்று தான் நினைத்தார்.
ஆனால், ஒரு மாதத்தைக் கடந்தும், ஈரான் அமெரிக்காவை வலுவாக எதிர்த்து வருகிறது.
இரண்டு, தங்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஐரோப்பிய நாடுகள், ‘இது எங்கள் போர் அல்ல’ என்பதில் தெளிவாக இருக்கிறது.
வளைகுடா நாடுகள் ‘தாங்கள் களத்தில் இறங்கினால் ஈரான் இன்னமும் இறங்கி அடிக்கும்’ என்கிற அச்சத்தில் இருக்கிறது. மேலும் அந்நாடுகள் சுற்றுலா துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஈரானுடன் போருக்கு சென்றால், அது பெரும் வீழ்ச்சியில் போய் முடியலாம்.

மூன்று, ஈரான் போரில் இது தான் ‘என்னுடைய’ கொள்கை… இது நடந்ததும் அங்கே இருந்து வெளியேறிவிடுவோம் என்று ட்ரம்ப் எந்தவொரு ‘எக்ஸிட் பிளானை’யும் வைத்திருக்கவில்லை.
ஈரான் போரில் ட்ரம்ப் என்ன எதிர்பார்க்கிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
எதற்காக போர் ஆரம்பித்தது என்று தெரியாமல், இப்போது ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்காக போர், தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
நான்கு, ஈரானின் புதிய ஆட்சியாளர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்… பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்று அவ்வப்போது கூறுகிறார். பின்னர், இன்னும் ஏன் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களுடன் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மோதிக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இப்படி இவர் தெளிவில்லாமல் பேசுவதும், ட்ரம்பின் பக்கம் மைனஸாக உள்ளது.
எல்லா பக்கமும் அடி, இடி விழுந்துகொண்டிருக்கும் நிலையில், ட்ரம்ப் என்ன செய்து மீளப் போகிறாரோ?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
