2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் வெப்பம் உக்கிரமாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டித் தொகுதியை தக்க வைக்கவும் தட்டிப் பறிக்கவும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய அளவிலான களேபரங்களே நடைபெற்று வருகின்றன.

திமுக – காங்கிரஸ்
ஊட்டி தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியிருப்பதால், மூன்றாவது முறையாக இந்த முறையும் தங்களுக்கே ஊட்டி தொகுதியை ஒதுக்க வேண்டியது தான் கூட்டணி தர்மம் என அந்த கட்சியினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
அதேவேளையில், ஆளுங்கட்சியாக இருந்தும் மாவட்ட தலைநகரான ஊட்டியை தொடர்ந்து கூட்டணிக்கு தாரை வார்ப்பதால் தி.மு.க- வின் செல்வாக்கு சரிவதுடன், கட்சிக்காக உழைக்கும் கழக நிர்வாகிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அதிமுக – பாஜக
அதேவேளையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஊட்டி தொகுதியை விடாப்பிடியாக கேட்டுப் பெற்றது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது.
கூட்டணிக்காக ஊட்டி தொகுதியை அ.தி.மு.க விட்டுக்கொடுத்து குன்னூர் தொகுதியில் களமிறங்கியது. ஆனால், அங்கும் தி.மு.க -விடம் வெற்றியை கோட்டை விட்டது. இந்த முறை அப்படி நிகழாமல் இருக்க ஊட்டி தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் உறுதியாக நிற்கின்றனர்.

அதேவேளையில், ஊட்டியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அதற்கு ஈடாக கொங்கு பகுதியில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பில் வேண்டுகோள் வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
எந்தெந்த கட்சிகளுக்கு ஊட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
