தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து சில இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது.
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து
வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. அந்தப் பகுதியில் பெய்த கனமழையால் அந்த சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்தது. சுமார் நான்கு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
நாகர்கோவில் கோட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றது. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 70 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் ஓட்டிச் சென்றார்
எச்சரித்த பொதுமக்கள்
பேருந்து வள்ளியூர் ரயில்வே பாலம் அருகில் சென்றபோது மழையில் குடைபிடித்தபடி அந்தப் பாலத்தின் அருகில் நின்ற பொதுமக்கள், அந்த வழியாக பேருந்து செல்ல முடியாது. சாலையில் நான்கு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது என டிரைவரை எச்சரித்தனர். மாற்றுப் பாதையில் பேருந்தை இயக்குமாறும் வலியுறுத்தினார்கள்.
பொதுமக்களின் எச்சரிகையை மீறி அரசுப் பேருந்தை ஓட்டுநர் சசிகுமார் இயக்கினார். அதனால், அந்தப் பேருந்து நடுவழியில் நீரில் சிக்கி நின்றது. அதில் பயணம் செய்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தை தண்ணீரில் இருந்து வெளியேற்ற டிரைவர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
அரசுப் பேருந்து
தகவல் அறிந்து வந்த வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் பேருந்தில் சிக்கியிருந்த 70 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ பதிவு செய்தனர். டிரைவரை எச்சரிப்பது, அதை அலட்சியப்படுத்திவிட்டு அவர் பேருந்தை இயக்கிச் சென்று தண்ணீரில் சிக்குவது ஆகியவை அதில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விளக்கம் கேட்டனர். அவர்கள் அளித்த விளக்கம் குறித்து பரிசீலனை செய்த பின்னர், பேருந்து ஓட்டுநர் சசிகுமார் பணியில் அலட்சியமாக செயல்பட்டது உறுதியானதால் அவரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து நாகர்கோவில் போக்குவரத்துக் கழக அதிகாரி மெர்லின் ஜெயந்தி உத்தரவு பிறப்பித்தார்.
ஓட்டுநர் சசிகுமார்
அத்துடன், அவசர காலங்களில் பயணிகளின் உயிரைக் காக்கும் வகையில் சமயோசிதமாக செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அளிக்கும் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யக் கூடாது எனவும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
