சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை.
வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மருத்துவர் வை.முத்துராஜா இருக்கிறார். அரசு மருத்துவராக இருந்த இவர், கடந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டு வெற்றிபெற்றார். இந்தமுறையும் சீட் கேட்டு கடுமையாக ஃபைட் செய்து வருகிறார். அவரது எளிமையான அணுகுமுறை, சொல்லிக் கொள்ளும்படியான மக்கள் நல பணிகள் அவருக்கு பலம் கூட்டுகிறது.
இந்நிலையில், அவருக்கு போட்டியாக புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் மு.க.முத்துக்கருப்பன் சீட் கேட்கிறார். புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரையா, முன்னாள் மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோரது குடும்ப வகையறாவை சேர்ந்த பாரம்பர்ய குடும்ப பின்னணி உடையவர் என்பதால், தொகுதி முழுக்க பரவலாக அறியப்படுகிறார்.

கொரோனா காலங்களில் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியது, கட்சியினருக்கு உதவுவது, கோடைக் காலங்களில் மக்கள் நலனில் அக்கறை காட்டும் செயல்களை செய்வது என்று தொகுதி மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயம் ஆனவர் என்பதால், இவருக்கு சீட் கிடைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஐபேக் டீம், உளவுத்துறை ரிப்போர்ட்டிலும் இவரது பெயர் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார்.
அதேபோல், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், ‘இந்தமுறை எப்படியும் சீட் வாங்கியே தீருவது’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சித்து வருகிறார். தொகுதியில் பரவலாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர், மக்களிடம் நன்கு அறிமுகமானவர், மாவட்ட செயலாளர் கோட்டா என்ற அடிப்படையில் இவருக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
அதேபோல், ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த எம்.எம்.அப்துல்லாவும் சீட் பிடி ரேஸில் முன்னணியில் இருக்கிறார். ‘மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். நகர செயலாளர் பதவி பிரிப்பு விஷயத்தில் இவர் நடந்துகொண்ட விதம் கட்சியினர் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்கியிருந்தாலும், அதைத்தாண்டி அவரது மக்கள் நல செயல்பாடுகள் அவருக்கு ப்ளஸாக உள்ளன.

தவிர, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதும் அவருக்கு வலு சேர்க்கிறது. இவர்களைத்தவிர, சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு தாவிய கார்த்திக் தொண்டைமானும் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார்.
இந்நிலையில், இந்த தொகுதி நிலவரம் குறித்து பேசிய புதுக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர்,
“எங்க கட்சியில் நிறைய பேர்கள் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஐந்து பேர்கள் தான் சீட் கிடைக்கும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. அதனால், இந்த தொகுதியை பெற பலரும் முட்டி மோதி வருகிறார்கள்.

அமைச்சர் ரகுபதி இந்தமுறை புதுக்கோட்டையை தனது மகன் அண்ணாமலைக்காக கேட்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், ஏற்கனவே கம்னியூஸ்ட் கட்சி வென்ற தொகுதி என்பதால், அவர்கள் கூட இந்த தொகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் வைத்திருக்கிறார்கள். ஆனால், யாருக்கு சீட் கிடைக்க போகிறது என்பது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தபிறகே தெரியவரும்” என்றார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
