Sorting by

×

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி எம்.செல்வராசு வயது 67. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக பதவி வகித்தவர். கீழத் தஞ்சையின் `சிவப்பு மல்லி’ என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி மாற்றுக் கட்சியினராலும் அழைக்கப்பட்டவர். எம்.செல்வராசு உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரின் உடல் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள சித்திமல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எம்.செல்வராசுவின் மறைவு டெல்டா மாவட்ட மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த
நாகப்பட்டினம் எம்.செல்வராசு எம்.பி

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், “திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தில் பிறந்தவர் எம்.செல்வராசு. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் நலனுக்காக பங்காற்றியவர். ஆங்கிலத்தில் புலமை கொண்ட அவர், கட்சியில் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் மாநிலப் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர், தேசியக் குழு உறுப்பினர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். படுகொலை செய்யப்பட்டு மறைந்த எஸ்.ஜி.முருகையனின் மூத்த மகள் கமலவதனத்தை திருமணம் செய்து கொண்டதுடன், மூத்த மருமகனாக இருந்து அந்த குடும்பத்தை வழி நடத்தியவர். இவர் மனைவி கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக ஐந்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றுவதற்கு ஊக்கமாக இருந்தவர்.

1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் முதன் முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இதைத் தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய தேர்தல்களிலும் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி மக்களின் பிரச்னைகளை முன் வைத்து எளிய மக்களின் குரலாக ஒலித்தவர். 1989-ல் காவிரி நதிநீர் பிரச்னைகளை களைவதற்கு நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் வரை எம்.செல்வராசால் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டம், இப்போதும் விவசாயிகள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இவர் எடுத்த பெரும் முயற்ச்சியில் பயிர்காப்பீடு திட்டம் சட்டமாக கொண்டு வரப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே தமிழக எம்.பி எம்.செல்வராசு. விவசாயம் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் வளர்ச்சிக்காக வித்திட்டவர். எளிமையானவர், கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர். உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரமாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டார். இவருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

எம்.செல்வராசு

2023ல் திருவாரூரில் நடைபெற்ற மூத்த மகள் செல்வப்பிரியா திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மிக எளியவர், நல்லவர், தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்காக உழைத்து வருபவர் என ஸ்டாலின் பாராட்டி பேசியதும் கைதட்டல்கள் அரங்கத்தை அதிரச் செய்தன. எம்.செல்வராசு, உடல் நலக்குறைபாட்டால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உயிரிழந்தார். டெல்டாவின் சிகப்பு மல்லி மறைந்தது எங்களுக்கெல்லாம் பெரும் இழப்பாக அமைந்து விட்டது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

ராஜ்ய சபா சீட்டும் 2026 கணக்கும்..! – கமல்ஹாசனை சந்தித்த திமுக முக்கிய நிர்வாகிகள் – பின்னணி என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *