திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர் அவர்கள்தான். ஆனால், இந்தியாவிலேயே நடிகராக இருந்து சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல் நபர் யார் தெரியுமா?
நாடகங்களில் நடிக்கத்தொடங்கி சினிமாவுக்குள் நுழைந்தவர் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவர்தான் எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே சட்டமன்றத்துக்குச் சென்ற நடிகர்.

எஸ்.எஸ். ராஜேந்திரன்
கலைஞர் கருணாநிதி எழுத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு அண்ணனாக நடித்த ராஜேந்திரன், ‘முதலாளி ‘(1957) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.
‘ரத்தக் கண்ணீர்’, ‘ரங்கூன் ராதா’, ‘சிவகங்கைச் சீமை’ போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான ‘பூம்புகார்’ அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று.
‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் இவரது கனீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.
முதல் நடிகராக சட்டமன்றத்தில் நுழைந்த ராஜேந்திரன்
1962ம் ஆண்டு திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் நடிகராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார்.
1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ராஜேந்திரன்.
இறுதிக்காலத்தில் அரசியலில் விலகல்
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சில காலம் தனிக் கட்சித் தொடங்கி செயல்பட்டவர், பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
அதன்பிறகு திருநாவுக்கரசுடன் இணைந்து செயல்பட்டவர், இறுதிக்காலத்தில் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
பிறகு திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ, ஒலிப்பதிவு தியேட்டர் போன்றவற்றை நிர்வகித்து வந்தவர் நுரையீரல் தொற்று காரணமாக 2014 ஆம் ஆண்டு மறைந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
