சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர், விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் பெயர் ரஞ்சித் போயார் என்பதும், 25 வயதான அவர் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற நிலையில், முதுகலை பயிற்சி பெற்று வந்துள்ளார் என்றும் தெரிகிறது. மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் போயரின் நண்பர்கள் சிலர், கல்லூரி வளாகத்தின் மாணவர் விடுதியில் உள்ள அவரது அறையில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக விடுதி மேற்பார்வையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து அமனகா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், “மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் இறந்து கிடந்தார். அவரிடமிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. இறந்தவர் ஒடிஸாவின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், போயர் கடந்த ஆண்டு பிஜி இன்டர்ன்ஷிப்பை முடிக்காததால் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கண்டறியப்படும்” என்று அவர் கூறினார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI