Sorting by

×

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1949-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியானது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட முதல் உயர்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆரம்பத்தில் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு இருந்தாலும், காலப்போக்கில் மேல்நிலைப் பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது.

தற்போது, இப்பள்ளியில் கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம், வானகிரி மற்றும் கீழையூரைச் சார்ந்த 280-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால், இப்பள்ளியில் ஆண்களுக்கென கழிவறை வசதியின்றி, வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் அவநிலையானது பல ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணமே உள்ளது. மேலும் இப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்தும், செடி கொடிகள் படர்ந்தும், மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.

இது குறித்து அப்பள்ளி மாணவர்களிடம் விசாரித்தபோது, “எங்க ஸ்கூல்ல பல வருசமா பாத்ரூம் இல்ல. பாத்ரூம் இருக்கு ஆனா, அந்த பாத்ரூம்ல தண்ணிலாம் வராது. அதனால நாங்க வெட்ட வெளியிலதான் பாத்ரூம் போறமாறி இருக்கு. எங்களுக்கே ஒரு மாதிரி இருக்கும். வெட்ட வெளியில போறதுனால, 100.மீ, நடந்துதான் போகணுமே.

அதுவும் போற வழி கொஞ்சம் காடா வேற இருக்கும். அப்படி போகுறப்ப பாம்பு, தேள் எல்லாம் வரும். போகவே பயமா இருக்கும். இருந்தாலும வேற‌ வழியில்லாமதான் போறோமே. இப்படிப் போனப்ப ஒரு பையன தேள் கொட்டிடுச்சு. அதே மாதிரி அந்த இடத்துல சில நேரங்கள்ல நெறைய பேரு குடிச்சிட்டு வேற இருப்பாங்க. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும். ஒடஞ்ச சாராய பாட்டில், பூச்சு பயம்னு அந்த வழியா போகவே யோசிக்க வேண்டியதா இருக்கு.

பாத்ரூம் போயிட்டு கைகால் கழுவ பக்கத்துல உள்ள குளத்து தண்ணியத்தான் பயன்படுத்துவோமே. அந்தக் குளத்து தண்ணி படும் மோசம்… அந்த தண்ணியால எங்களுக்கு எதுவும் தோள் நோய் வந்துடுமோன்னுகூட தோணுது. இதுவே எங்களுக்கு பாத்ரூம் இருந்தா இப்டியெல்லாம் நாங்க போக வேண்டிய அவசியம் இருக்காதுல்ல. நாங்க வெளியில உள்ள ஸ்கூல்லுக்கெல்லாம் எதாவது போட்டின்னா போவோம். அந்த ஸ்கூல்லா பாக்கவே ரொம்ப அழகா கட்டடம், கிரௌன்ட் எல்லாமே சூப்பரா இருக்கும்.

ஆனா, எங்க ஸ்கூல் அப்படியே ஆப்போசிட்… கிரௌண்ட்‌ எல்லாம் கொஞ்சம் காடாவும், பில்டிங் எல்லாம் ரொம்ப ரொம்ப பழசாவும் தான் இருக்கே. அந்த ஸ்கூலலாம் பாக்கும்போது எங்களுக்கு தோணும், நம்ம ஸ்கூல் ஏன் இப்டி இல்ல. நம்ம ஸ்கூல் எப்ப‌ இப்டி அழகா மாறுன்னு.

அவசரத்துக்கு பாத்ரூம் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. அதே மாதிரி பில்டிங்கும் ரொம்ப மோசமான நிலைமையில இருக்கு. அதனால கட்டடத்த புதுப்பிச்சு, பாத்ரூம் கட்டிக் கொடுத்தா நல்லா இருக்கும்” என்றனர், பெரும் ஏக்கத்துடன்.

இது குறித்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இந்திரகுமார் நம்மிடம் பேசுகையில், “சமூக விரோத கும்பல்களால் கழிவறையின் செப்டிக்டேங்க் மற்றும் மதில் சுவர்கள் உடைக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வசதியின்றி 8 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் வெட்ட வெளியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர்.

இதனால் மாணவர்கள் அதிகம் சிரமமடைவதோடு மட்டுமல்லாமல், அசௌகரியமான சூழ்நிலைக்குத் தள்ளபடுகின்றனர். மேலும் மதில்சுவர் உடைந்து இருப்பதால் ஒரு சிலர் பள்ளி வளாகத்தை தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. எனவே விரைந்து பள்ளியில் புதிய செப்டிக்டேங்க் மற்றும் கழிவறைக்கான தண்ணீர் இணைப்புக் குழாய்கள் அமைத்து தற்போது உள்ள கழிவறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாற்றித் தரவதோடு மட்டுமல்லாமல், மதில் சுவரையும் சீர்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியனிடம் பேசியபோது, “கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது, மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் கண்டிப்பாக செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

அரசு விரைந்து துறைசார்ந்து நடவடிக்கை மேற்கொண்டு கழிவறையையும், மதில் சுவரையும் சீர்படுத்தித் தருவதோடு, பள்ளி வளாகத்தையும் மேம்படுத்திட வேண்டும் என்பதே அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *