தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் திருட்டுப் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி சின்னமணி நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (63). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சென்னையில் பணியாற்றி வருகிறார்.
மனைவியைப் பார்ப்பதற்காக சுகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுள்ளதால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சனிக்கிழமை காலை இவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் திருடு போனது தெரியவந்தது. அந்த நகைகள் சுமார் 100 பவுனுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!
இது குறித்து தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
