Sorting by

×

`விவசாயிகள், நம் நாட்டின் முதுகெலும்பு’ என ஆட்சியாளர்களின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கின்றன. ஆனால், இவர்களின் இதயமோ, கார்ப்பரேட் நிறுவனங் களை அல்லவா நேசிக்கின்றன. விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்தில் இது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. இந்நிலையில், ‘கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்ற விவசாயிகளின் கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் இதற்காக ஒருமித்த குரல் எழுப்பி வருகிறார்கள். இக்கோரிக்கையில் 100% நியாயம் உள்ளது. பருவம் தவறிய மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி, நோய்த்தாக்குதல்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறமிருக்க… விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால், பெரும்பாலான தருணங்களில் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். இதனால், தங்களுடைய அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்படும் நிலையில் உள்ளனர். இந்த லட்சணத்தில், வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன்களை எப்படி முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. ஆனால், இன்றுவரையிலும் வேளாண் விளைபொருள்களுக்கு உத்தரவாதமான லாப விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் நம் நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பொருளாதாரத் தன்னிறைவு அடைய முடியாத அவல நிலை தொடர்கிறது.

கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பிறகு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், ஒரு நயா பைசாவைக் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. கடந்த 19 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பல முறை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திருக்கிறார்கள். ஆனால், இதை மத்திய ஆட்சி யாளர்கள் கண்டுகொண்டதேயில்லை. வேளாண் கடன் தள்ளுபடி என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்குக் கசக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி என்று சொன்னால் இனிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் கடன்களைப் பல்வேறு சலுகைகளின் பேரில் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில், விவசாயிகளில் சுமார் 30% விவசாயிகளுக்கே கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன்கள் கிடைக்கின்றன. மீதி 70% விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண் கடன்களைப் பெற்றுள்ளனர். இக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற விவசாயிகள் நியாயமான கோரிக்கையை மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு, மற்ற அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

– ஆசிரியர்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *