கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள வ.வேப்பங்குடியைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்பவர், அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், இந்தப் பகுதியை மேம்படுத்திட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடவூர் பகுதியை வளர்ச்சி பாதைக்கு மாற்ற வேண்டுமென்றால், மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டும் என்று கூறும் இவர், அதற்காக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும், கடவூர் ஒன்றியத்தில் செய்ய வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து, அவரிடம் பேசினோம்.
“நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட கடவூரில் 32 குக்கிராமங்கள் உள்ளன. வெளியில் இருந்து உள்ளே சென்று வர மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இந்த மலைகளுக்கு இடையில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார உருவாக்கிய வானகமும், அவரது சமாதியும் அமைந்துள்ளன. ஆனால், இந்தப்பகுதியில் இயற்கை விவசாயம் பெரிதாக யாரும் செய்வதில்லை.
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்தும் பல திட்டங்களை இங்கு செயல்படுத்த வேண்டும். கடவூர் மலை பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழை நீரை சரியான வடிகால் அமைப்புகள் மூலமாக கடவூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி அதன் பிறகு அதன் உபரி நீரை தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சபட்டி ஏரிக்கு கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதேபோல், பொன்னணியாறு அணையில் இருந்து வடக்கு நோக்கி வாய்க்கால்களை தூர்வாரியும் தண்ணீர் கொண்டு வந்து வரவனை ஊராட்சியில் உள்ள கருணாபுரம் குளத்தினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி தண்ணீர் நிரம்ப வழிவகை செய்தால் பஞ்சப்பட்டி வரை விவயசயம் செழிக்கும் என்பதால், கருணாபுரம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தவிர, கடவூர் உள் மாகாணம், இடையபட்டி கிழக்கு, மேற்கு என்று இரண்டு கிராம பகுதிகளில் அல்லது வரவனை ஊராட்சியில் புதியதாக நீர் தேக்கத்தை உருவாக்கியும், அதற்கு காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை வாய்க்கால் வெட்டி எடுத்து புதிய கடவூர் டேம் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் மையமான மையனூர் எனும் மாயனூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை முதல் மதுரை வரை செல்லும் காவிரி நீரானது கடவூருக்கு கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். மேற்கண்ட மூன்று கோரிக்கைகளால் கடவூர் பகுதி விவசாயம் செழிக்க, மக்களின் வாழ்வாதாரம் உயர உதவும். அதேபோல், கடவூர் பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்பேட்டை அல்லது தொழிற்சாலை விரைந்து உருவாக்கப்பட வேண்டும்.
கடவூரில் இருந்து கரூர் சென்று வர 4 மணி நேரம் ஆகின்ற காரணத்தால் நேர விரயமும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதும் குறைவதால் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. அதற்குரிய திட்டங்களை வகுக்க வேண்டும். தரகம்பட்டியில் பேருந்து நிலையம் மற்றும் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். தரகம்பட்டி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகமாக வருவதாலும் போதுமான கழிப்பிட மற்றும் நிழல் வசதி இல்லாததாலும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மைலம்பட்டியில் உள்ள சுகாதார நிலையத்தை மாவட்ட அளவிலான மருத்துவமனை அளவிற்கு இன்னும் அதிக வசதிகளோடு தரம் உயர்த்தப்பட வேண்டும். தோகைமலைக்கு மேற்கே உள்ள பல கிராமங்கள் மற்றும் கடவூர் வரை உள்ள கிராம மக்கள் கரூர் வரை செல்வது மிக சிரமம் என்பதால் பல்நோக்கு மாவட்ட துணை மருத்துவமனை அளவிற்கு தரம் உயர்த்தினால் மக்களுக்கு உதவும்.
வரவனை ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும். கடவூர் ஒன்றியத்தில் மைலம்பட்டியில் இருந்து வரவனை வரை 10 கிலோ மீட்டருக்கு மேலாக சுமார் நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைய உதவும். காணியாளம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேர மருத்துவருடன் செயல்படவும், தரம் உயர்த்தி போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற்ற வழிவகை செய்யப்படவேண்டும். அதேபோல், காணியாளம்பட்டியில் இருந்து கரூர் வரை போதுமான வசதிகளோடு அரசு மருத்துவமனை இல்லாத கரூர் மருத்துவக்கல்லூரி செல்லும் நிலையிலிருந்து மக்கள் உயிர் காக்க உதவும். தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கடவூர் ஒன்றியம் இருபது ஊராட்சிகளை உள்ளடக்கிய அடர்த்தியான மக்கள் தொகை உள்ள பகுதியில் தீயணைப்பு நிலையம் மிக அவசியம்.
தரகம்பட்டி அல்லது காணியாளம்பட்டியில் உழவர் சந்தை வேண்டும். கடவூர் ஒன்றியத்தில் உழவர் சந்தை இதுவரை இல்லை. இதனால், இங்குள்ள உழவர்கள் பயனடைவர். நல்லூரான்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும். சிந்தாமணிபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவு வரை பல கிராமங்கள் விவசாயம் மற்றும் வீட்டு மின் இணைப்புகள் பயனடையும். 2500 ஆண்டுகள் பழமையான தேவர்மலை கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் அதிகமாக சுப நிகழ்ச்சிகள் நடப்பதால் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சமுதாயக்கூடங்கள் அமைத்து தரவேண்டும். கடவூரில் உள்ள அரிதான மூலிகைகளை காப்பாற்ற கடவூரில் சித்த மருத்துவக்கல்லூரி அல்லது மூலிகை ஆராய்ச்சி மையம் நிறுவப்பட வேண்டும். கடவூரின் பொன்னணியாறு அணை சுற்றுலா தளமாக உள்ளதால் தரகம்பட்டியில் இருந்து அரசு பேருந்து வசதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இதனால், அரசுக்கு வருமானம் அதிகமாக வாய்ப்புள்ளது.
அதேபோல், இளைஞர்களுக்கு விளையாட்டு திறன் மேம்படவும், பயிற்சி எடுக்கவும் கடவூர் ஒன்றியத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். பெண்கள் சுய உதவிக்குழு மகளிர் அவர்கள் பொருட்களை விற்பதற்கு பெண்களுக்கான வணிக வளாகம் அமைக்கப்பட வேண்டும். வரவனை ஊராட்சியில் வார சந்தை அமைக்கப்பட வேண்டும். தரகம்பட்டி நூலகம் தரம் உயர்த்தப்பட்டு அரசுத் தேர்வுகளுக்கான வழிகாட்டி மற்றும் பயிற்சி மையம் உருவாக்கப்பட வேண்டும். கொசூர், தரகம்பட்டியிலிருந்து வீரப்பூர் சென்றுவர அரசு பேருந்து வசதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இப்படி, வளர்ச்சிகள் எதுவும் இன்றி சவலைப்பிள்ளையாக கிடைக்கும் இந்த கடவூர் ஒன்றியத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்த விஷயங்களை உள்ளடக்கிய தேர்தல் வாக்குறுதிகளை தரும் வேட்பாளருக்கு மக்கள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
