Sorting by

×

கணக்கு கேட்ட தலைமை!ஸ்வீட்டைச் சுருட்டிய மா.செ-க்கள்…

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கொங்கு மண்டலத்தில் ஆடை மற்றும் முட்டை மாவட்டத் தொகுதிகளின் ஆளுங்கட்சி மா.செ-க்கள் செய்த தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியிருக்கின்றன. “வாக்காளருக்கு வழங்குவதற்காகத் தலைமையிலிருந்து வந்த ஸ்வீட் பாக்ஸுகளில் இவர்கள் இருவரும் வெறும் 30 சதவிகித்தைக்கூடத் தொகுதிக்குள் கொண்டு சேர்க்கவில்லை. இதன் மூலம் ஒரே தேர்தலில் அவர்கள் இருவரும் தலா பத்து ஸ்வீட் பாக்ஸுகள் வரை லாபம் பார்த்திருக்கிறார்கள்” எனப் புள்ளிவிவரத்தோடு தலைமைக்குப் புகார் போயிருக்கிறது. இதையடுத்து இருவரையும் அழைத்து விளக்கம் கேட்ட தலைமைக்கழகம், ஒப்படைக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸுகளுக்கான செலவுக் கணக்குகளை முழுமையாக அனுப்பிவைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம். இதனால், இருவரும் தங்களிடம் கொடுக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸுகளுக்கான செலவுக் கணக்கைத் தயார் செய்வதற்காக மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கொங்கு உடன்பிறப்புகள்.

கொதிக்கும் விஞ்ஞானப்புள்ளி!“எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்…”

`இலைக் கட்சியின் மதுரை விஞ்ஞானப்புள்ளியின் போக்கு சரியில்லை’ என்று எம்.ஜி.ஆர் மாளிகைக்குப் புகாருக்கு மேல் புகார் போய்க்கொண்டேயிருக்கின்றனவாம். இது போதாதென்று, ‘தலைமையின் பிறந்தநாளன்று நேரில் சென்று வாழ்த்துச் சொல்லாததோடு, கட்சியின் நிறுவனத் தலைவரை, ஒரு நடிகரோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்’ என இப்போது மேலும் இரண்டு புகார்கள் போயிருக்கின்றன. இதனால் தலைமையும் விஞ்ஞானப்புள்ளியின் மீது அப்செட்டில் இருக்கிறதாம். இந்த விவகாரம் விஞ்ஞானப்புள்ளியின் காதுகளை எட்ட, “இது எல்லாத்துக்கும் அந்தாளுதான் காரணம்.

மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அண்ணாமலை… அரசு கொடுத்த அனுமதி… பதறிய ஆளுநர் மாளிகை!

ஜால்ரா தட்டுறதே பிழைப்பா வெச்சிருக்கிறவரு, அதை மட்டும் செய்யவேண்டியதுதானே… ஏன் நான் என்ன பேசினாலும் அதை அப்படியே நெகட்டிவ்வாகத் தலைமையிடம் போட்டுக் கொடுக்குறாரு?” என உள்ளூரைச் சேர்ந்த மற்றொரு மாஜிமீது செம காண்டில் இருக்கிறாராம். “கட்சியில இருக்குற பிரச்னைகள் போதாதுன்னு, இவங்க வேற” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தூங்கா நகர ரத்தத்தின் ரத்தங்கள்.

அறிவாலயத்தைச் சுற்றும் நிர்வாகிகள்!இழந்த பதவி மீண்டும் கிடைக்குமா?

`தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு, அமைச்சரவையிலும் கட்சிக்குள்ளும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும்’ என்ற பேச்சுதான் அறிவாலய வட்டாரத்தின் இப்போதைய ஹாட் டாபிக். சிலர் தங்களுக்குப் பதவி கிடைக்கும் என உற்சாகத்திலும், பலர் தங்கள் பதவி போய்விடுமோ என்ற அச்சத்திலும் இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

இதில் தலைநகருக்குப் பக்கத்து நகரில், தான் செய்த சேட்டைகளால் அமைச்சர் பதவியை இழந்தவரும், தென்னகத்தில் அடாவடி நடவடிக்கைகளால் மா.செ பதவியை இழந்த இருவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, எப்படியாவது இழந்த பதவியை வாங்கிவிடும் எண்ணத்தில் அறிவாலயத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார்களாம். `இந்த முயற்சியெல்லாம் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தெரியவரும்’ என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

செ.பெ-வுக்கு எதிராகக் கொதிக்கும் உ.பி-கள்!‘அவரைத் தட்டிவைக்கணும்…’

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சு, “இவரா இப்படிப் பேசியது?’’ என்று காங்கிரஸாருக்கே ஷாக் கொடுத்திருக்கிறது. “இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. இனியும் நாம் அமைதியாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. எத்தனை காலம் இன்னொரு கட்சியிடம், `எங்களுக்குத் தொகுதிகள் கொடுங்கள்’ எனக் கையேந்தி நிற்பது… தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுக்கும் நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் பேசியதே கட்சியினரின் ஷாக்குக்குக் காரணம்.

செல்வப்பெருந்தகை

அவரது இந்தப் பேச்சு, தி.மு.க-வினரைக் கொந்தளிக்கவைத்துவிட்டதாம். “ஏற்கெனவே, ‘காமராஜர் நினைவிடம் சுடுகாடுபோல இருக்கிறது… குறைந்தபட்சம் ஜெயலலிதா நினைவிடம் போன்றாவது இதைப் பொதுப்பணித்துறை பராமரிக்க வேண்டாமா?’ என்று கேட்டு தி.மு.க அரசை விமர்சித்தவர், இப்போது நேரடியாகவே தி.மு.க-வை வம்புக்கு இழுத்திருக்கிறார். “இதுவரை தலைவர் பொறுப்புக்கு வந்தவர்கள் கட்சிக்குள்தான் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இவரோ கூட்டணிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். டெல்லியில் சொல்லி இவரைத் தட்டிவைக்கணும்” என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி..!’ – செல்வப்பெருந்தகையின் பேச்சும், திமுக ரியாக்‌ஷனும்!துண்டுபோடும் அதிகாரிகள்!காலியாகும் கமிஷனர் நாற்காலி…

சென்னை புறநகரில் பணியாற்றும் போலீஸ் கமிஷனர் ஒருவரை இடமாற்றம் செய்ய ஆளுங்கட்சி மேலிடம் சிக்னல் கொடுத்துவிட்டதாம். `தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரிசல்ட் வெளியான பிறகு அவர் இடமாற்றம் செய்யப்படுவார்’ என்கிறது காவல்துறை வட்டாரம். காலியாகவிருக்கும் அந்த நாற்காலியில் உட்கார, பல சீனியர் ஐ.பி.எஸ்-கள் இப்போதே முண்டியடிக்கிறார்கள். ஆனாலும், தலைநகரில் விங் ஒன்றில் பணியாற்றும் ஏ.டி.ஜி.பி ஒருவர் அந்த நாற்காலிக்காக ஆட்சி மேலிடத்திடம் பேசி துண்டுபோட்டு வைத்திருப்பதாகச் சொல்கிறது காவல்துறை பட்சி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *