கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பா.ஜ.க ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
முதியோர் ஓய்வூதியம் 3000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் ஒரே மாதிரியாக வாக்குறுதி அளித்துள்ளன. ரப்பர் அடிப்படை விலை கிலோவுக்கு 300 ரூபாயாக உறுதிச்செய்யப்படும் என சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் ஒற்றுமையாக கூறி உள்ளன.
‘இந்திரா கேரண்டி’
‘இந்திரா கேரண்டி’ என்ற பெயரில் 6 முக்கிய வாக்குறுதிகள் உள்ளடங்கிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கொச்சியில் வைத்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார். அதில் முதியோருக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும். பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். ரப்பர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரப்பர் கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும்.
அனைத்து குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு அளிக்கும் ‘உம்மன் சாண்டி ஆரோக்கிய இன்சூரன்ஸ்’ என்ற பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்ற 6 கேரண்டிகள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளன.
இதுதவிர முதியோர்களின் நலனுக்காகத் தனி அமைச்சகம் அல்லது தனித் துறை உருவாக்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்வி பயில ‘கே.ஆர். நாராயணன் ஸ்காலர்ஷிப்’ மற்றும் கடன் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வயநாட்டில் பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பாண்டிச்சேரி ஜிப்மர் மாடலில் கட்டணம் இல்லா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். கேரளம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்” என்பது போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன.

சி.பி.எம் தேர்தல் அறிக்கை
கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் சி.பி.எம் தேர்தல் அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் கேரளம் அடைந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சிக்காக 60 அம்சத் திட்டங்கள் மற்றும் 950 பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சி.பி.எம் தேர்தல் அறிக்கையில், முதியோர் ஓய்வூதியங்கள் 3,000 ரூபாயாக உயர்த்தப்படும். மாநிலத்தில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். கேரளாவில் கல்வி பயின்றால் வேலை உறுதி செய்யப்படும். பெண்களில் 50% பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். தொழில்முனைவோருக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் விரிவுபடுத்தப்படும். திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அங்கமாலி-சபரி ரயில் பாதை திட்டம் பூர்த்தி செய்யப்படும். அதிவேக ரயில் பாதை மற்றும் ரயில் போக்குவரத்து வலையமைப்பு வலுப்படுத்தப்படும். நீர் போக்குவரத்து மற்றும் வாட்டர் மெட்ரோ வலுப்படுத்தப்படும். உயர்கல்வி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும். வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஏற்படுத்தப்படும். சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகள் கூறப்பட்டு உள்ளன.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை
பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு உணவு மற்றும் சுகாதார அட்டை வழங்கப்பட்டு, அதில் மாதம்தோறும் 2,500 ரூபாய் ரீசார்ஜ் செய்யப்படும் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும். கேரளத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் எனவும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரமும் மூன்று கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உறுதிச்செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் சபரிமலை மாஸ்டர் பிளான் நிறைவு செய்யப்படும் எனவும், ‘கிளீன் பம்பா’ திட்டத்தைச் செயல்படுத்துவோம் எனவும் சி.பி.எம் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
