Sorting by

×

நடைபெறும் மக்களவைத் தேர்தலில். ‘மகாலட்சுமி திட்டம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கும் வாக்குறுதி, முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெருமளவில் கவர்ந்து, வெற்றியைப் பெறுவதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

சோனியா காந்தி

இந்தியாவின் ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை மகாலட்சுமி திட்டம் ஏற்படுத்தப்போகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்துவருகிறார்கள். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரண்டு நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டார்.

அதில், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி ‘மகாலட்சுமி’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதன்படி, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விலைவாசி உயர்வால் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஏழைப் பெண்களுக்கு மகாலட்சுமி திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்” என்றார் சோனியா காந்தி.

Congress Manifesto | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மேலும், “காங்கிரஸ் கட்சியின் பல திட்டங்கள் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கின்றன. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப்பாதுகாப்புத் திட்டம் என எந்தத் திட்டமாக இருந்தாலும், அதன் மூலமாக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிகாரம் அளித்திருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், காங்கிரஸின் கை உங்கள் பக்கம் இருக்கிறது. இந்தக் கை உங்கள் நிலைமையை மாற்றும்” என்றார் சோனியா காந்தி.

மக்களவைத் தேர்தலையொட்டி, ‘நியாயப் பத்திரம்’ என்ற பெயரில் முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. அதில், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மிக முக்கியமான திட்டம்.

Congress Manifesto | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

“மகாலட்சுமி திட்டத்தின்படி, குடும்பத்தின் மூத்த பெண்கள்தான் பயனாளிகள். அந்த ஒரு லட்சம் ரூபாய், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை குறித்தும், மகாலட்சுமி திட்டம் எந்தளவுக்கு வறுமையைப் போக்குகிறது என்பது குறித்தும் ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!’ – கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம்

ஆனால், இந்தத் திட்டம் குறித்து பா.ஜ.க போன்ற கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ‘இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஏழைப் பெண்ணுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டியிருக்கும். அப்படியென்றால், இந்தத் திட்டத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அவ்வளவு நிதிக்கான திட்டம் எங்கே? அதனை காங்கிரஸ் எங்கும் குறிப்பிடவில்லை, இது ஒரு சாத்தியமற்ற வாக்குறுதி’ என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்கிறார்கள்.

பிரியங்கா காந்தி

மகாலட்சுமி திட்டத்துக்கு ஏழைப் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஓர் ஆண்டுக்கு ரூ.2.1 லட்சம் கோடி முதல், ரூ.5 லட்சம் கோடி வரை அரசுக்கு செலவாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் கோடி செலவிட முடியுமா? அந்தளவுக்கு அரசிடம் பணம் இருக்கிறதா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இந்த நிலையில், ‘இத்தகைய திட்டங்களுக்கு நிதி செலவிடுவது ஒரு பிரச்னையே இல்லை’ என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

‘100 நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்தது. அப்போது, இந்தத் திட்டத்துக்கான பணத்துக்கு எங்கே போவீர்கள் என்று கேட்டார்கள். இந்தத் திட்டம் மக்களை சோம்பேறிகளாக மாற்றிவிடும் என்று விமர்சித்தார்கள். ஆனால், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு பக்கபலமாக இன்றைக்கு 100 நாள் வேலைத் திட்டம் இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

ப.சிதம்பரம்

அதுபோலத்தான், மகாலட்சுமி திட்டமும். பெரும் கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்க முடிகிறது போது, பல லட்சம் ஏழைப் பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய இந்தத் திட்டத்துக்காக நிதி கிடைக்காதா?’ என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தியும், “ஜூலை மாதம் முதல் தேதியில் ஏழை பெண்களின் வங்கிக்கணக்கில் ஒரு மேஜிக் நிகழும்” என பேசி வருகிறார்,

பெண்களின் வாக்குகளைக் கவர முடியும் என்ற நம்பிக்கையில்தான் மகாலட்சுமி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. கடந்த சில சட்டமன்ற தேர்தல்களில், பெண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதனையொட்டி தான் தற்போது பெண் வாக்களர்களை மையப்படுத்தி காங்கிரஸ் திட்டமிடுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சோனியா காந்தி தொடங்கி அத்தனை தலைவர்களும் இத்திட்டம் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிவருகிறார்கள். எனவே, பெண்களின் வாக்குகுளை பெற இந்தத் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். முடிவு ஜூன் 4-ம் தேதி தான் தெரியவரும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *