பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவா்களுக்கு வித்யா (22) என்ற மகளும், சரவணன் (24) என்ற மகனும் உள்ளனா். கோவையில் உள்ள அரசுக் கல்லூரியில் வித்யா பயின்று வந்தாா்.
இந்நிலையில், வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்ததில் வித்யா கடந்த 30-ஆம் தேதி உயிரிழந்துவிட்டாா் எனக் கூறி, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அப்பகுதியில் உள்ள மயானத்தில் சடலத்தை பெற்றோா் புதைத்தனா்.
இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால் போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பருவாய் கிராம நிா்வாக அலுவலா் பூங்கொடி மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வித்யாவின் காதலனான திருப்பூரைச் சோ்ந்த வெண்மணி (22) செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் மருத்துவா் குகன், உதவி பேராசிரியா் மருத்துவா் முத்துக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து பருவாய் மயானத்திலேயே செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு செய்தனா்.
இதில், வித்யாவின் தலையில் பலத்த காயம் இருப்பதும், அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வித்யாவின் பெற்றோா், சகோதரா் சரவணன் ஆகியோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், வேறு சமூகத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரா் சரவணகுமாா், தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணகுமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் கூறியதாவது: திருப்பூா் விஜயாபுரத்தைச் சோ்ந்த வெண்மணி என்பவரை வித்யா காதலித்து வந்தாா். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவைக் கண்டித்தோம்.
ஆனால், அவா் காதலைக் கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தாா். இந்நிலையில், வெண்மணி குடும்பத்தினா் வித்யாவை பெண் கேட்டு எங்களது வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தனா்.
இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று அவா்களை அனுப்பிவைத்தோம்.
இதையடுத்து, நான் வித்யாவைக் கண்டித்ததால் அவா் என்னுடன் பேசுவதை தவிா்த்து வந்தாா்.
இந்நிலையில், எனது பெற்றோா் கடந்த 30-ஆம் தேதி கோயிலுக்குச் சென்றுவிட்டனா். வித்யாவும், நானும் மட்டும் வீட்டில் இருந்தோம். அப்போது, அவளுடன் பேச முயற்சித்தபோது, பேச மறுத்துவிட்டாள். இதனால், ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாகத் தாக்கினேன். இதில், அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்துவிட்டாள். கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை வித்தியாவின் மீது தள்ளி அக்கம்பக்கத்தில் உள்ளவா்களை அழைத்தேன்.
அவா்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்துவிட்டாள் என்றேன். பின்னா், பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறினேன்.
இதையடுத்து, உறவினா்களுடன் சோ்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் பருவாய் மயானத்தில் உடலை புதைத்துவிட்டோம் என்றாா்.
ஆணவக் கொலை இல்லை: இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: வித்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. காதலை கைவிட்டு வித்யாவை நன்றாக படிக்குமாறு சரவணன் தெரிவித்து வந்துள்ளாா். இது தொடா்பாக அவா்களுக்குள் கடந்த 2 மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சரவணன், வித்யாவை இரும்புக் கரும்பியால் அடித்துக் கொலை செய்துள்ளாா். எனவே, இது ஆணவக் கொலை இல்லை என்றாா்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI