கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ‘புதுயுக யாத்திரை’ என்ற பெயரில் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். புதுயுக யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக திருவனந்தபுரம் புத்தரிகண்டம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “சி.பி.எம் – பி.ஜே.பி கூட்டணி காரணமாகத்தான் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ-யும் பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தவில்லை. கேரளாவில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி இணைந்து சி.ஜே.பி தான் உள்ளது. சி.பி.எம்-மும் பி.ஜே.பி-யும் இணைந்து காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கைகோர்க்கிறார்கள். எனக்கு எதிராக அமலாக்கத்துறை 36 வழக்குகள் பதிவு செய்துள்ளது. என்னிடம் 55 மணி நேரம் விசாரணை செய்தது. ஆனால் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரள அரசுக்கு கம்யூனிஸ்ட் பண்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை இந்த அரசு பாதுகாக்கவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரை மாற்றி ‘கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா’ என்று ஆக்க வேண்டும். சபரிமலை தங்கக் கொள்ளையில் பல சி.பி.எம் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகளாவிய ஆபத்தான சூழ்நிலை இருந்தும் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவுடன் உடன் ஒப்பந்தம் செய்து நாட்டை வஞ்சித்துள்ளார். அமெரிக்கா சொல்பவர்களிடமிருந்து மட்டுமே கச்சா எண்ணெய் வாங்குவதாக ட்ரம்பிற்கு வாக்கு கொடுத்துள்ளார் மோடி. மோடி சமரசமாக செல்வதற்கு ‘எப்ஸ்டீன் ஃபைல்கள்’தான் காரணம். காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். தனி நபராக நடனம் ஆடுவதைவிட, குழு நடனம் தான் நன்றாக இருக்கும். இது மக்களின் அறிவுரையாகும். என் வாழ்வின் நெருக்கடியான கட்டத்தில் ஆதரவாக நின்றவர்கள் கேரள மக்கள். நான் கேரளாவிற்கு கடமைப்பட்டுள்ளேன்.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் இலவசப் பயணத்திட்டமும், கல்லூரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். உம்மன் சாண்டி பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இளம் தொழில்முனைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக தனித் துறை ஏற்படுத்தப்படும். இந்த ஐந்து திட்டங்களும் இந்திரா கேரண்டி ஆகும்” இவ்வாறு அவர் பேசினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
