Sorting by

×

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க., த.வெ.க என ஏற்கெனவே நான்குமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், தனித்துப் போட்டியிடுகிறார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி!

இதுவரை நடந்த 14 தேர்தல்களில் இங்கு ஐந்து முறை போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி, இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக  பா.ஜ.க-வின் முகமாகவே மாறியிருந்த கிருஷ்ணசாமியை, இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தனித்துப் போட்டியிடும் முடிவை அவர் எடுத்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு முறை வெற்றி பெற்றதாலும், இந்தத் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகம் உண்டு என்பதாலும், 6-வது முறையாக மீண்டும் ஒட்டப்பிடாரத்திலேயே தனித்துக் களம் காண்கிறார். இந்தச் சூழலில், அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்வியுடன் தொகுதிக்குள் வலம்வந்தோம்.

கிருஷ்ணசாமி

தொகுதியில் 35% பட்டியலினத்தவர்களும், 30% நாடார்களும், 20% முக்குலத்தோர்களும், 15% இதர சமூகத்தினரும் பரவலாக வசிக்கின்றனர். அ.தி.மு.க அதிக முறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியை கடந்த இரு தேர்தல்களாகத் தொடர்ந்து தன்வசமாக்கி வைத்திருக்கிறது தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையராஜா ஆகியோர் சீட்டுக்காக முயற்சித்து வந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளரான ராமஜெயம் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது.

இவர், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்தவர். “தி.மு.க-வின் செல்வாக்கான தொகுதியாக மாறியிருக்கும் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குள் அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் எப்படி?” எனக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் நிர்வாகிகள். எனவே, இவரின் வெற்றிக்கு தி.மு.க-வினர் உழைப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தே.ஜ கூட்டணியில் அ.ம.மு.க வேட்பாளராக சுந்தர்ராஜ் இரண்டாம் முறையாகக் களமிறங்கியிருக்கிறார். சீட் எதிர்பார்த்திருந்த இலைக் கட்சி நிர்வாகிகள் இதனால் கடும் அப்செட். எனவே, அ.தி.மு.க வாக்குகள் சிதறாமல் அவருக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. பேருந்து நிலையம், புதிய யூனியன், ஆயத்த ஆடைப் பூங்கா எனத் தொகுதியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், தீர்க்கப்படாத பிரச்னைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டுவருகிறார், நா.த.க வேட்பாளர் அனுசியா.

சுந்தர்ராஜ் (அ.ம.மு.க)- ராமஜெயம் (தி.மு.க)

தொகுதியில் கணிசமான எண்ணிக்கையிலுள்ள இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கிறார் த.வெ.க வேட்பாளர் மதன்ராஜா. “தென்மாவட்டங்களில் கொடியன்குளம் கலவரம் தொடங்கி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை வரை ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் கிருஷ்ணசாமிதான். ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள பொட்டலூரணியில் இயங்கிவரும் கழிவு மீன் ஆலையை அகற்ற வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணசாமி நேரடியாகக் களத்துக்கு வந்து ஆய்வுசெய்து, போராடிய மக்களுக்கு ஆதரவு கொடுத்தார். ஒட்டப்பிடாரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரிகளை மூடிவிடவும் போராடினார். இந்தத் தொகுதிக்குள் அமைந்துள்ள ‘வின்ஃபாஸ்ட்’ போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தினார். இப்படி எங்களுடன் களத்தில் நிற்கும் கிருஷ்ணசாமிக்கே எங்கள் வாக்கு” என்கிறார் 62 வயதான ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் தர்மராஜ்.

“மழையை மட்டுமே நம்பியிருக்கும் மானாவாரி விவசாயம் நடக்கும் இந்தத் தொகுதியில் பெரும் காற்றாலை நிறுவனங்கள், விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி காற்றாலை அமைத்துவருகிறார்கள். இது குறித்து சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவிடம் முறையிட்டும் எந்தப் பலனுமில்லை. எதிர்க் கட்சியான அ.தி.மு.க-வும் இதற்காகக் குரல் கொடுக்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியினர் குரல் கொடுத்து ஆட்சியர் முதல் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். எனவே, என் போன்றோரின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்குத்தான்” என்கிறார் 35 வயதான ஆறுமுகம்.

அனுசியா (நா.த.க)- மதன்ராஜா (த.வெ.க)

“கிராமப்புறத்தைச் சேர்ந்த நாங்கள், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை மூலம் பலனடைந்துவருகிறோம். `உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள். எங்களது வாக்கு தி.மு.க-வுக்குத்தான்” என்கிறார் 45 வயதான மாற்றுத்திறனாளிப் பெண் தங்கம்மாள்.

தனக்கான தனி செல்வாக்கு, தி.மு.க., அ.தி.மு.க அதிருப்தி வாக்குகள் ஆகியவற்றை நம்புகிறார் கிருஷ்ணசாமி. அதேசமயம், ‘தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்குள் தலைகாட்டுவார்’ எனப் பல பகுதிகளில் அவர்மீது அதிருப்தி அலையும் வீசுகிறது. தொகுதியில் தி.மு.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைத்தாக வேண்டும்!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *