Sorting by

×

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர் தெரிவித்த அதிரடியாக சில கருத்துக்கள், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால்

“உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?’ என்று ’இந்தியா’ கூட்டணியைப் பார்த்து கேட்கிறார்கள். பா.ஜ.க-வைப் பார்த்து நான் கேட்கிறேன்… ‘உங்களுடைய பிரதமர் யார்?. மோடிக்கு அடுத்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி 75 வயது ஆகப் போகிறது. அவர், 2014-ம் ஆண்டிலிருந்து பிரதமராக இருக்கிறார். பா.ஜ.க-வில் 75 வயததை அடைந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பதவியும் கிடையாது என்ற விதியை பா.ஜ.க வகுத்துவைத்திருக்கிறது.எனவே, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்க விரும்புகிறேன்” என்றார்.

இந்நிலையில் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “2024 தேர்தலுக்குப் பிறகு மோடி பிரதமர் ஆக மாட்டார் என்று டெல்லி முதல்வர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரே ஜாமீனில்தான் வெளியே வந்துள்ளார். ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். அவர் இந்தியப் பிரதமரைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசுகிறார்.

2024 மட்டுமல்ல, 2029-ம் ஆண்டிலும் மோடி பிரதமராக வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது. கெஜ்ரிவால், எங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றியும் முட்டாள்தனமாகப் பேசியுள்ளார். மோடி ஜி பிரதமராக இருக்க மாட்டார், யோகி ஜி முதல்வராக இருக்க மாட்டார்… அதாவது அவர் மட்டுமே இருப்பார், வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்கிறார். இத்தகைய வலுவான மற்றும் திறமையான தலைமையைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைக் கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ராஜ்நாத் சிங்

பொய்களை மட்டும் சொல்லி அரசியல் செய்ய முடியாது என்று நான் கூற விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதன் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள அரசியலைச் செய்ய முடியும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சர்வாதிகாரம் வரும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அவர் அரசியலமைப்பை மாற்றுவார், ஜனநாயகம் இருக்காது என்கின்றனர். ஜனநாயகமே ஆபத்தை எதிர்கொண்டதென்றால், அது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில்தான். நாங்கள் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கவில்லை. காங்கிரஸ் இதுவரை 132 முறை அரசியலமைப்பை மாற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசியலமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. கெஜ்ரிவால் டெல்லியின் வளர்ச்சி குறித்து நிறையக் கூறுகிறார். டெல்லியின் நிலையைப் போய் பாருங்கள்… என்ன செய்திருக்கிறார்? டெல்லியில் என்ன வளர்ச்சி நடந்தாலும், அதற்கான அதிகபட்ச புகழ் யாருக்காவது சென்றால், அது பிரதமர் மோடிக்குத்தான் சேரும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *