Sorting by

×

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோட்டயம் புதுப்பள்ளி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா? இந்த ஒற்றை வரியில் இருந்து தேர்தலின் மனநிலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். சி.பி.எம் கூட்டணி சபரிமலையில் இருந்து தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு அதற்கு பதிலாக செம்பு கொண்டு வைத்தனர். அதே சமயம், எல்லா அரசியல் பிரசாரங்களிலும் மதத்தைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும், தெய்வங்களைப் பற்றியும் பேசும் பிரதமர் மோடி கேரளாவில் பிரசாரம் செய்யும்போது, அதை மறந்துவிட்டார். கேரளாவுக்கு வரும்போது சி.பி.எம் தலைவர்கள் சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்துவிட்டு செம்பு வைத்தது பற்றி மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கேரளாவில் இடதுசாரிகள் சபரிமலை ஐயப்ப சுவாமியின் தங்கத்தைத் திருடினார்கள் என்பதை மோடி வசமாக மறந்துவிடுகிறார். சி.பி.எம் கட்சியை பாதுகாப்பதற்காக புனிதமான கோயிலில் நடந்த கொள்ளையை மறைத்து வைக்கிறார் மோடி. சி.பி.எம் மற்றும் பா.ஜ.க ஒன்றாக நிற்கின்றன. நரேந்திர மோடி இந்துவைப் பற்றியோ, கோயில்கள் பற்றியோ கவலைப்படவில்லை. சி.பி.எம் கூட்டணியின் விருப்பங்களை பாதுகாப்பதற்காக மோடி சபரிமலை பற்றி பேசவில்லை. சபரிமலை கோயிலில் இருந்து வாக்களிப்பார்கள் என்றால் மோடி அதுபற்றி பேசியிருப்பார். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும் என நரேந்திர மோடி விரும்புகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சபரிமலையில் ஐயப்ப சுவாமி கோயிலில் கொள்ளை நடத்தியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம்.

கேரளாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

உம்மன் சாண்டி 50 ஆண்டுகள் புதுப்பள்ளி மக்களின் பிரதிநிதியாக இருந்தார். புதுப்பள்ளிக்கும் கேரள மக்களுக்கும் வழிகாட்டியாக இருந்தார். அவரை மிகவும் பிரியமுடன் நினைத்துப் பார்க்கிறேன். பாரத் ஜோடோ யாத்திரையின்போது நடக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுத்தும் அவர் அதை அன்போடு மறுத்துவிட்டு என்னுடன் நடந்தார். அவர் மறைந்தபோது இறுதி ஊர்வலம் 30 மணி நேரம் நடந்தது. அவரது மகன் சாண்டி உம்மனுகாக நான் இங்கு பிரசாரம் செய்ய வந்துள்ளேன். 90 சதவிகிதம் ரப்பர் கோட்டயத்தில்தான் உற்பத்தி ஆகிறது. ரப்பர் விலை நிர்ணயம் செய்வது கோட்டயம் ஆகும். 2016-ல் ரப்பரின் அடிப்படை ஆதார விலையை 250 ரூபாயாக மாற்றுவோம் என்றார்கள், சி.பி.எம் கட்சியினர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2026-ல் ரப்பர் அடிப்படை ஆதார விலையை 200 ரூபாயாக நிர்ணயிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ரப்பரின் இன்றையவிலை 220 ரூபாய் ஆகும். மதிப்பில்லாத வாக்குறுதிகளை அறிவிக்கும் ஆட்கள் அல்ல நாங்கள். நாங்கள் விவசாயிகளை பாதுகாப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் ரப்பர் கிலோவுக்கு 300 ரூபாயாக அதிகரிப்போம் என தெரிவித்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்குவரும் முதல் நாளிலேயே ரப்பர் விலை 300 ரூபாயாக இருக்கும். விவசாயிகளும், தொழிலாளர்களும்தான் இந்த நாட்டின் அடித்தளம் என நாங்கள் நம்புகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது பெண்கள் இலவசமாக கே.எஸ்.ஆர்.டி பேருந்தில் பயணிக்கலாம். கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். முதியவர்கள் ஓய்வூதியம் 3000 ரூபாயாக அதிகரிக்கப்படும். இவை எல்லாம் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் கேரண்டி ஆகும்.

ராகுல் காந்தி கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

எனக்கு எதிராக 36 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நான் ஜாமீனில் நின்றுதான் இங்கு பிரசாரம் செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து 55 மணிநேரம் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். ஏன் முதல்வர் பினராயி விஜயன் மீது வழக்குப் பதியவில்லை. அவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை. எதற்காக பினராயி விஜயனின் பிள்ளைகளிடம் விசாரணை நடத்தவில்லை. மோடியும் பினராயி விஜயனும் பார்ட்னர்களாக உள்ளனர். கேரளாவில் உள்ளது முதலாளித்துவ அரசு, அதானியின் அரசு, அம்பானியின் அரசு. இந்தியா விரும்பும் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலைதான் உள்ளது. இரான், இராக் அல்லது சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் ட்ரம்பின் அனுமதி பெற்ற பிறகுதான் வாங்க முடியும். இதைவிட வெட்கம் வேறு எதுவும் இல்லை. சுதந்திர நாடான நமக்கு அமெரிக்காவின் அனுமதியை கேட்கும் நிலை உள்ளது. 9 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகளை வாங்குவதாக பிரதமர் கூறி உள்ளார். அப்படி என்றால் மேக் இன் இண்டியா திட்டம் என்ன ஆகும். மேக் இன் அமெரிக்கா என மாறும். அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப்-தான் மோடியை இயக்குகிறார். அதானி என்பது பா.ஜ.க-வின் வருவாயின் அங்கமாகும். அதானி குறித்த சின்ன விவரங்கள்கூட அமெரிக்காவுக்குத் தெரியும். மோடியை மிரட்டுவதற்காக அதானியை பயன்படுத்துகிறது அமெரிக்கா. டொனால்ட் ட்ரம்ப் மோடியை மிரட்டுவது போன்று, மோடி கேரளத்தின் பினராயி விஜயனை மிரட்டுகிறார்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *