கேரள இடது ஜனநாயகக் கூட்டணி அரசில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் கே.பி.கணேஷ் குமார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
அவரது தந்தை பாலகிருஷ்ணபிள்ளைத் தொடங்கிய கேரளா காங்கிரஸ்(பி) என்ற கட்சியின் தலைவராக உள்ளார். கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
கேரளா காங்கிரஸ் (பி) கட்சி சி.பி.எம் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் கூட்டணி ஒப்பந்தத்தின்படி கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.
கே.பி.கணேஷ்குமாருக்கும் பிந்து மேனனுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே கே.பி.கணேஷ்குமாரின் மனைவி பிந்து மேனன் நேற்று மீடியாக்களிடம் தனது கணவர் குறித்த சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், “வாளகத்தில் உள்ள குடும்ப வீட்டுக்குக் கடந்த 7-ம் தேதி நான் சென்றபோது அங்கு என் கணவர் கே.பி.கணேஷ்குமாரை மற்றொரு பெண்ணுடன் யாரும் பார்க்கக்கூடாத மோசமான நிலையில் பார்த்தேன். உடனே எனது செல்போனில் போட்டோ எடுத்தேன்.
அப்போது அவரது ஊழியர் ஒருவர் என்னைத் தடுத்து நிறுத்தும்விதமாக கதவை அடைக்க முயன்றார். மற்றொருவர் எனது செல்போனைப் பறிக்க முயன்றார். அங்கிருந்தபடியே எனது உறவினரும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ஸ்ரீலேகாவை அழைத்தேன்.
அவரது ஆலோசனைப்படி பாதுகாப்புக்காக காவல்துறையின் 112 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து என்னைப் பற்றியும், எனது பிரச்னை குறித்தும் தெரிவித்தேன். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை வீட்டிற்குள் நுழைய கணேஷ்குமாரின் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இது குடும்ப பிரச்னை என்பதால் அதில் தலையிட முடியாது எனக் கூறி போலீஸார் சென்றுவிட்டனர். இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனின் மகளிடமும் தகவல் தெரிவித்தேன்” என்றார்.

அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் குறித்து அவரது மனைவி கூறிய குற்றச்சாட்டுகள் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொட்டாரக்கரா-வில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் ஐ.டி பார்க் அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையே கணேஷ்குமார் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வயநாடு கல்பற்றாவில் இளைஞர் காங்கிரஸார் கையில் கோழியுடன் கே.பி.கணேஷ்குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அவரது உருவபொம்மையை எரித்தனர்.
கே.பி.கணேஷ்குமாரின் அலுவலகம் நோக்கி பா.ஜ.க-வினர் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கே.பி.கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற பல விஷயங்கள் வரும். இதற்கு முன்பும் எனது வீட்டில் இருந்து பிரச்னை வந்துள்ளது. எனது அரசியலைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும்.
மக்கள் பிரதிநிதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்கிறார். அதனால் கேரளாவுக்கு என்ன நன்மை நடந்தது என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அது தெரியும்.

கணேஷ் குமாருக்கு காதல் உண்டு. உங்களில் காதலிக்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா. கணேஷ்குமாருக்கு ஒன்றல்ல ஐந்தாயிரம் காதல் உண்டு. காதல் இல்லாதவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், அவனுக்கு தலையில் ஏதாவது வியாதி இருக்கலாம்.
ஜவஹர்லால் நேருவுக்கு காதல் இருந்தது. ராஜீவ் காந்தி காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார். சூடான காதல் வேண்டும் என மலையாள எழுத்தாளர் மாதவிகுட்டி தெரிவித்துள்ளார். மனநிலை சரியில்லாத யாருக்கும் 112-க்கு அழைக்கலாம்.
எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிடவேண்டாம். நான் ஒரு பொது சேவகன், நல்ல எம்.எல்.ஏ, ஏழைகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகும். காதல் குறித்து என்னிடம் கேட்டால் நான் பிறகு விரிவாகப் பேசுகிறேன்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
