கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது.
கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது.
பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி.
இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் கே.முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மீண்டும் நேமம் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
நேற்று நேமம் தொகுதியில் சுவர் எழுதும் பணியைத் தொடங்கிவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார் ராஜீவ் சந்திரசேகர். பின்னர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன்.
இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். தேசியத் தலைமை இறுதி முடிவை எடுத்து, விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்கள் எனக்கு அளித்த ஆதரவையும், அன்பையும் மறக்க முடியாது” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சரான பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யுமான சசிதரூரை நேமம் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 3 பேர் ஏற்கனவே வென்றுள்ளனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி கேரள மாநில முதல்வராக இருந்த வரலாறு உள்ளது. எனவே, முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சசிதரூரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
சி.பி.எம் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் சிவன்குட்டி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நேமம் தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறும் நிலை உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
