Sorting by

×

“இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிகை விடுத்திருக்கிறார்.

வெட்கக்கேடானது!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ” இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக  ‘கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

 ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா
தி கேரளா ஸ்டோரி 2 சினிமா

எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை.

‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு. மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அவர்கள் எதைச் சாதிப்பார்கள்?

சாதியும், மதயும் எப்படி ஒரு நாட்டில் அரசியலாகும்?. பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். நாட்டின் குடிகளுக்குள் பகை ஏற்பட்டால் தீர்த்து வைத்து, சமாதானம் ஏற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே, சாதி,  மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? மதத்தைப் பார்ப்பவர்கள் மனிதத்தை எப்படிப் பார்ப்பார்கள்?  படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை.

அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே,  தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால்  மக்களுக்குள்  ஏற்றப்படுகிறது. மதப்பிரிவினையை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பாஜக ஆளும் மாநில அரசுகள் வரி தள்ளுபடி செய்து ஊக்கப்படுத்துவதும், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் அதியுயர் அமைச்சர்களே ஆதரித்து விளம்பரம் செய்வதும், விருது கொடுப்பதும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் சிதைக்கவே வழிவகுக்கும்.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா
தி கேரளா ஸ்டோரி 2 சினிமா

பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? 

இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து  திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. * இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன?

அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? *   

ஆட்சியாளர்களின் சூழ்ச்சி.!

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும்  காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும்,  பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை. 

படைப்புச்சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலை மனங்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களைத் துண்டாடுவதாக இருக்கக்கூடாது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த கடந்த 12 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதல்ல. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.

சீமான்
சீமான்

கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்? 

இந்த அளவிற்கு மதவெறுப்பையும், மனித வெறுப்பையும் கடைபிடிக்கும் எவரும் கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா?

மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா? இசுலாமிய – கிறித்துவ நாடுகளுடன் வணிகம், தொழில், இராணுவம் என்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இங்கு வாழும் இசுலாமிய, கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்? 

 திமுக அரசு  அனுமதிப்பது ஏன்?

‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று திமுக அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா? இல்லையா? அதன்பிறகும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்? தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா?. இசுலாத்தையும், இசுலாமிய பெருமக்களையும்   இழிவுப்படுத்தும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தை  தடை செய்யக் கேரள மாநில அரசு நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில்,  அத்திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முழுதும் திரையிட  திமுக அரசு  அனுமதிப்பது ஏன்?

இது குறித்து, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இசுலாமிய அமைப்புகள் இதுவரை வாய்த் திறவாமல் கள்ள அமைதிகாப்பது ஏன்? ஓரிரு சட்டமன்ற இடங்களுக்காக  ஒட்டுமொத்த இசுலாமிய மக்களின் உரிமையையும் அடகு வைத்துவிட்டீர்களா? கிறித்துவ மதக் கோட்பாட்டை இழிவுப்படுத்திய டாவின்சி கோட் திரைப்படத்தை ஐயா கருணாநிதி அவர்களும், இசுலாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்த விசுவரூபம் திரைப்படத்தை அம்மையார் ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதித்த வரலாற்றைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி

தடுத்து நிறுத்த வேண்டும்

ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட  தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், எப்படி ‘கேரளா ஸ்டோரி1’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி போராடி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தியதோ, அப்படி  ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன்” என்று சீமான் பதிவிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *