Sorting by

×

கோடை வெயில் தணிந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோடை வெயில் சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்துவந்தனர்.

ஆனால் வருண பகவான் கைவிடவில்லை. அவரின் கருணையால் கோடை வெயில் மேலும் அதிகரிக்காமல் விடுதலையளித்துள்ளது. கடந்த நான்கு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மே 18, 19 அஆகிய தேதிகளில் 200 மி.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் அதையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்துள்ளது.

இரவு நேரங்களில் இடைவிடாது சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு நிலவி வந்தது. இன்று காலையும் சிலு சிலுவென மழை பொழிந்து வருகிறது. மேலும் மே 19 வரை ஒருசில பகுதியில் கனமழை பெய்யக்கூடும்.

இதனிடையே, விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 8 செ.மீ மழையும், திருப்பூர் உடுமலைப்பேட்டையில் 6, கிளானிலை (புதுக்கோட்டை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் துவங்க வாய்ப்புள்ளது என் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *