சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, `கோமா’ நிலையில் சுயநினைவில்லாமல் இருக்கிறார். அதனால், அவருடைய மனைவி சசிகலா, கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் குடும்ப பராமரிப்புக்காக தன் கணவரின் வங்கிக் கணக்குகளை கையாளவும், ரூ.1 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது அடமானம் வைக்கவோ பாதுகாவலராக தன்னை நியமிக்க சட்டரீதியான அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, மனநலப் பாதுகாப்புச் சட்டம் 2017-ல் இதுபோன்ற சூழ்நிலைகளில் சொத்துகளை கையாள்வது குறித்து எந்தவொரு விதிமுறைகளும் இல்லை என்பதால், சிவகுமாரின் சொத்துக்களுக்கு, அவரின் மனைவியை பாதுகாவலராக நியமிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. விசாரணையின்போது, சசிகலா, தனது இரு குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை தனது கணவரின் சொத்துகளுக்கு பாதுகாப்பாளராக நியமிப்பதன் அவசியம் குறித்தும், தங்களது தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், “கோமா நிலையில் சுயநினைவின்றி இருக்கும் ஒருவரை பராமரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்போது மேல்முறையீட்டாளரே அனைத்து சுமைகளையும் சுமந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மேல்முறையீட்டாளரை உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்துள்ளது சரியானதல்ல.
சட்டத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டாளரை, கோமாவில் உள்ள கணவரின் பாதுகாவலராக அமர்த்த இயலாவிட்டாலும், மனுவில் தெரிவித்துள்ள காரணங்களின் அடிப்படையில் பரிசீலித்து தனி நீதிபதி நிவாரணம் வழங்கியிருக்கலாம். தற்போது கோமா நிலையில் உள்ள சிவக்குமாரை கவனித்துக் கொள்ள எந்த வழியும் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருவதாகவும், சொத்தை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ அனுமதிக்காவிட்டால், அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
மருத்துவம்
கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்தச் சட்டத்தின் கீழும், வேறு எந்த தீர்வும் வழங்கப்படாததால், parens patriae என்ற சட்ட முதுமொழியின் அடிப்படையில், மனைவியை, தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத கணவரின் பாதுகாவலராக நியமிக்கலாம் என்ற கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கிறது. எனவே, சிவக்குமாரின் சொத்துகளுக்கு அவரது மனைவி சசிகலாவை பாதுகாவலராக நியமித்து, ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேநேரம், விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் ரூ.50 லட்சத்தை சிவகுமாரின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக டெபாசிட் செய்து, அதில், காலாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் வட்டியை சிவக்குமாரின் மருத்துவப் பராமரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தீர்ப்பளித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குப் பயணம்; மோடி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
