Sorting by

×

பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், மேடைக்கு அருகே காரில் வர முயன்ற வானதி சீனிவாசனை, ‘நாம் ஒன்றும் வி.ஐ.பி கிடையாது’ என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைத்தான் தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளராக நியமிப்பார்கள் என்று வானதி எதிர்பார்த்தாராம்.

ஆனால், பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டதில் வானதி கடும் அப்செட்டாம். ‘தன்னை மீறி வானதி தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருப்பதை பியூஸ் கோயல் விரும்பவில்லை. இருவருக்குமிடையே ஈகோ மோதல் முற்றியிருக்கும் நிலையில், வானதி கேட்கும் கோவை வடக்கு தொகுதிகூட அவருக்குக் கிடைக்காமலிருக்க வேலை பார்க்கிறார் கோயல். ஆனால், வானதி நேரடியாகவே எடப்பாடியிடம் பேசி தனக்கு வேண்டிய தொகுதியைப் பெறுவதற்கான வேலையைத் தொடங்கிவிட்டார்’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

வெயில் மாவட்ட மாண்புமிகுவின் தொகுதியில், கூட்டுறவு சங்கத்தின் பல்வேறு இடங்களில் மாண்புமிகுவுக்கு வேண்டியவர்களே பணியில் இருப்பதால், சங்கத்தின் சொத்துக்களை சட்டவிரோதமாக மாண்புமிகுவின் வாரிசுக்கும் அவருக்கு வேண்டிய நபர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்களாம். சமீபத்தில்கூட சங்கத்துக்குச் சொந்தமான மனைகளை விற்பனை செய்ய ஏல அறிவிப்பு வெளியானது. உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் செய்தால் சிக்கிக்கொள்வோம் என, தலைநகரில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் மட்டும் விளம்பரம் கொடுத்து, உள்ளூரில் யாருக்கும் தெரியாதபடி ஏலத்தை நடத்திட முயற்சி செய்திருக்கிறார்கள். கடைசியில் விஷயம் கசியவே ஏலத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 20 காக்கிகளை மாற்றியிருக்கிறது தமிழக அரசு. ‘மீசை’ மாண்புமிகுவுக்கு சிக்கல் நெருங்கும் நிலையில், அவர் சம்பந்தப்பட்ட வழக்கைக் கையாள்வதற்காகவே, உயரதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றியிருக்கிறார்களாம். அவர் ‘ஆசீர்வாத’மே மாண்புமிகுவைக் காக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாறுதல் நடந்துள்ளது.

காலியாக இருந்த மலைக்கோட்டை ஏரியாவுக்கு ‘சோழ மன்னர்’ பெயர்கொண்ட அதிகாரியை பணியமர்த்தியிருக்கின்றனர். இதனால், அந்த ஏரியாவை எதிர்பார்த்திருந்த வெள்ளை மாளிகையின் உளவுப்பிரிவு அதிகாரி டோட்டல் அப்செட்டாம்.

‘குயின்’ மாவட்ட மாண்புமிகுவுடன் முரண்பாட்டிலிருந்த பெண் அதிகாரி, அல்வா மாவட்ட மணியான அதிகாரி எனப் பல காக்கிகளும் தேர்தலைக் காரணம் காட்டி தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், நீண்டகாலம் காத்திருப்பில் இருந்த உயரதிகாரிக்கும் ஒரு பணியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக இன்னொரு லிஸ்ட் வெளியாகும்’ என்று தகவல்கள் கூறுவதால், காக்கிகள் மத்தியில் பரபரப்பு அடங்கவில்லை.

‘கோட்டை’ மாவட்டத்தில், சூரியக்கட்சி மாண்புமிகுவை எதிர்த்து யார் வரும் தேர்தலில் போட்டியிடுவது என்ற பஞ்சாயத்து இலைக்கட்சியில் கொழுந்துவிட்டு எரிகிறதாம். அவருடைய தொகுதியில், இலைக்கட்சியின் ஆதிக்கம்தான் கடந்த சில தேர்தல்கள் வரையில் கொடிக்கட்டிப் பறந்தது. தற்போது இலைக்கட்சியில் சீட் எதிர்பார்க்கும் மறைந்த எம்.எல்.ஏ-வின் வாரிசு, ‘என் அப்பா காலத்திலிருந்தே எங்கள் குடும்பத்திற்கென தொகுதியில் பலத்த செல்வாக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மூன்று முறை தொகுதியில் வென்றிருக்கிறார் என் அப்பா. மாண்புமிகுவை எதிர்த்து என்னை நிறுத்தினால், அவரைத் தோற்கடித்துக் காட்டுவேன்’ என்று கட்சித் தலைமையிடம் வாய்ப்புக் கேட்டு காத்திருக்கிறாராம்.

ஆனால், ‘அந்த குடும்பத்தை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டுவந்தால் நமக்குப் போட்டியாக வருவார்கள்…’ என்று சொல்லி, வாரிசைத் தட்டிக் கழிப்பதுடன், கட்சி மாறி வந்த தங்கமான ஒருவருக்குத் தொகுதியைப் பெற்றுத்தரும் முயற்சியில் இருக்கிறாராம் கோட்டை மாவட்ட இலைக்கட்சியின் டாக்டர் மாஜி.

திருத்தணியிலுள்ள அரசு கலைக்கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. முதல்வரே காணொலி காட்சி வாயிலாக சிலையைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்வில், சம்பந்தப்பட்ட கல்லூரியின் பெண் அதிகாரிக்கு இருக்கையே வழங்கப்படவில்லையாம். ‘அவர் சார்ந்த சமூகத்தைக் காரணம் காட்டி இருக்கை வழங்கவில்லை’ என்ற சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் பங்குபெற்ற அந்த நிகழ்ச்சி முடியும் வரையில் நிற்க வைக்கப்பட்டுள்ளார் அந்தப் பெண் அதிகாரி. விவகாரம் ஆட்சி மேலிடம் வரையில் புகாராக, இப்போது விசாரணை நடத்த உத்தரவு பறந்திருக்கிறதாம்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *