கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அதில் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரஸில் இறுதிகட்ட வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் சுரேஷ்கோபி தனது திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சூர் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். இந்த தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெறும்போது எனக்கு அது பக்கபலமாக மாறும்.

எம்.பி-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் நிற்பது அந்தந்த கட்சிகளின் முடிவைப் பொறுத்த விஷயம். அது அவர்களின் அதிகார ஆசை என்றோ, ஆசை இல்லாத நிலையா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. நான் என்.டி.ஏ கூட்டணியின் முன்னேற்றம் என நினைத்துக்கொண்டு அதுபோன்று குதிக்க தயாராக இல்லை. ஒருவேளை என்னிடம் எங்கள் தலைவர்கள் அதுபோன்று கூறினால் நான் அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிடுவேன். நான் பலமானவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். தெய்வம் ஆதரிக்கும் வரை நான் அந்த சீட்டில் இருப்பேன்.

இது நான் மற்றவர்களுக்கு கூறும் உபதேசம் அல்ல. காங்கிரஸில் சீட் கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுதாகரனைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. 2029 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் மக்களின் முழு மதிப்பெண் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் எனக்கு ஒற்றைக்கொம்பன் சினிமாவில் கிடைக்கும் சம்பளம் என்னவென்று விசாரித்துப்பாருங்கள். அந்த சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சினிமாவை கவனித்துக்கொண்டும், என் பிள்ளைகளை கவனித்துக்கொண்டும் இருந்தால் போதுமே. மக்கள் பணி செய்வதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
