Sorting by

×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ் உள்ளிட்ட 9 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு தனிநபரின் அடிப்படை உரிமை என்பது மற்றவர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கோயிலுக்குள் நுழையும் உரிமையை நாம் ஆராயும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கக் கூடாது என்று நம்பும் பக்தர்களின் மத உணர்வையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

பக்தர்களின் இந்த உரிமை இதுவரை எங்குமே முழுமையாக விவாதிக்கப்படவில்லை. எனவே, கோயிலுக்குள் நுழைவதற்கான உரிமை என்பது அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. அதில் வெளியாட்கள் தலையிட முடியாது. இந்து மதம் பெண்களைச் சமமாக நடத்துவது மட்டுமல்லாமல், ஆண்களை விட மிக உயர்ந்த பீடத்தில் அவர்களை அமர்த்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில், நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் மத சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக ஆண்களின் நுழைவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

புஷ்கரில் உள்ள பிரம்மன் கோயிலில் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை. கேரளாவில் உள்ள ஒரு கோயிலில், ஆண்கள் பெண் வேடமிட்டு அம்மனின் அருளைப் பெறவேண்டுகிறார்கள். 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கிய 2018-ம் ஆண்டின் தீர்ப்பு, ஆண்கள் உயர்ந்தவர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்து மரபுகளுக்குள் நிலவும் பரந்த நடைமுறைகளைப் பிரதிபலிக்கவில்லை.

இந்திய அரசியலமைப்பு வழங்கும் மதச் சுதந்திரம் – சட்டப்பிரிவு 25, 26 அடிப்படையில், பல நூறு வருடமாக ஒரு கோயிலில் கடைப்பிடிக்கும் மத நம்பிக்கையை, எல்லோரும் சமம் என்ற 14-வது சட்டப் பிரிவின் கீழ் சிதைக்க முடியாது. அந்த மதத்தின் சிறப்பம்சங்களையும் சேர்த்துப் பார்த்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

துஷார் மேத்தா
துஷார் மேத்தா

உலகிலேயே, பெண் தெய்வங்கள் வழிபடப்படுவது மட்டுமல்லாமல், ஆண்கள் அந்தத் தெய்வங்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி, அந்தப் புனிதமான ‘தாய் தெய்வங்களின்’ பக்தர்களாகத் திகழும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்று உறுதியாகக் கூறலாம்.

பாலினத்தின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதி அளிப்பது என்பது ‘பாலினப் பாகுபாடு’ சார்ந்த விஷயம் அல்ல. மாறாக அது மத நடைமுறை, நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். எனவே, அது நீதிமன்ற மறுஆய்வின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதற்கான சான்றுகளாக ஆறு கோயில்களின் உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

1. கேரளாவில் உள்ள ஆட்டுக்கால் பகவதி கோயில், ஒரு மத நிகழ்விற்காகப் பெண்கள் ஒரே இடத்தில் மிகப்பெரிய அளவில் திரண்டதற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பிடித்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பொங்கல் விழாவின் முக்கிய நாளில், ஆண்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை.

2. கேரளாவில் அமைந்துள்ள சக்குலத்துக்காவு கோயிலில், பகவதி தேவி வழிபடப்படுகிறாள். இங்கு ‘நாரி பூஜை’ எனப்படும் வருடாந்திர சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், 10 நாள்கள் விரதம் இருக்கும் பெண் பக்தர்களின் பாதங்களை ஆண் அர்ச்சகர் கழுவி விடுகிறார். இந்நாள் ‘தனு’ என்று அழைக்கப்படுகிறது. ‘நாரி பூஜை’ நடைபெறும் சமயத்தில், பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மத்திய அரசு

3. புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மன் கோயில், 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்து புராணங்களின்படி படைப்புக் கடவுளாகக் கருதப்படும் பிரம்மனுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒரே கோயில் இதுவே ஆகும். இவரை மிக நெருக்கமாக நின்று வழிபடும் திருமணமான ஆண்களின் இல்லற வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. எனவே, மரபுரீதியாகத் திருமணமான ஆண்கள் இக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதில்லை.

4. கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில், தேவி கன்னியாகுமரி வழிபடப்படுகிறாள். சிவபெருமானைத் தனக்குக் கணவனாகப் பெற வேண்டி, கடலின் நடுவே அமைந்திருந்த ஒரு தனிமையான இடத்தில் தேவி தவம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. புராணங்களின்படி, சதி தேவியின் முதுகெலும்பு விழுந்த இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தேவி ‘சந்நியாச தேவி’ என்றும் அழைக்கப்படுகிறாள். இக்காரணங்களினால், பிரம்மச்சாரிய விரதம் பூண்ட ஆண்கள் கோயிலின் நுழைவாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணமான ஆண்கள் கோயிலின் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

5. பீகார் மாநிலம் முசாபர்பூரில் அமைந்துள்ள மாதா கோயிலில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆண்கள் நுழைவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், ஆண் அர்ச்சகர்கூட வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இக்காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

6. கேரளாவில் அமைந்துள்ள கொட்டன்குளங்கரா ஸ்ரீ தேவி கோயிலில், ‘சமயவிளக்கு’ எனப்படும் ஒரு தனித்துவமான மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஆண்கள் பெண்களைப் போன்ற ஆடையணிந்து, தேவியின் அருளை வேண்டி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் மற்றொரு வழக்கமும் உள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெண்களைப் போன்ற ஆடையணிந்து வழிபடுகிறார்கள்.

7. அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காமரூப் காமாக்யா கோயிலில், ‘அம்புபாச்சி’ திருவிழாவின்போது ஆண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் தேவி தனது வருடாந்திர மாதவிடாய் சுழற்சியை மேற்கொள்வதாக நம்பப்படுகிறது. இச்சமயத்தில் பெண் அர்ச்சகர்கள் மட்டுமே கோயிலில் சேவை செய்கிறார்கள்.

எனவே, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த விவாதங்கள் நடைபெறும் சூழலில், ஆணாதிக்கம் மற்றும் பாலினப் பாகுபாடுகள் போன்ற கருத்துருக்கள் நாட்டின் நாகரிகப் பண்பாட்டு விழுமியங்களுக்கு சரியானவை அல்ல. மேலும், இத்தகைய கருத்துகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதும் சரியான முறையல்ல.” என வாதிட்டார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *