“சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை….” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினரை சமாதானப்படுத்தத்தான் என்கிறார்கள்.

பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “திமுக அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைத்துவிட்டது. தமிழக மக்கள் ஸ்டாலினை மன்னிக்க மாட்டார்கள். கடந்த 6 ஆண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் மிகப்பெரிய 3 சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை வைத்துதான் இந்தியாவில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைத்து நவீன இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அதைப்போல நீண்ட நாள் கோரிக்கையான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்தை கொடுத்துள்ளார் மோடி, திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. சமூக நீதி என்றாலே மோடிதான், மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும், மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்” என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அன்புமணி இப்படி ஆவேசமாகப் பேச கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த ‘ஆஷா’ திரைப்பட விழாதான் காரணம் என்கிறார்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினர். அந்த நிகழ்வில் “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லையென்றால் மத்திய அமைச்சராக இருந்தபோது என்னால் எதுவும் செய்திருக்க முடியாது” என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை தடுக்க அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் என்ற ஆஷா திட்டம் 2005-ல் மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின்படி நாடு முழுவதும் பத்து லட்சம் கிராமங்களில் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் வெற்றி குறித்து ஆஷா எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மராத்தியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் தீபக் பாட்டில் தயாரிப்பாளர் தைவதா பாட்டில் ஆகியோருடன் அன்புமணியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அன்புமணி, “நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பத்து மாதம் திட்டமிட்டு ஆஷா திட்டத்தை உருவாக்கினேன். கடநத இருபது ஆண்டுகளில் இத்திட்டம் மிகப்பெரும் வெற்றி அமைந்துள்ளது. 2005-ல் ஒரு லட்சம் பிரசவத்தில் தாய், இறப்பு விகிதம் 300 ஆக இருநதது. அது இப்பொழுது 88 ஆக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 க்கு 68 ஆக இருந்தது, இப்போது 35 ஆக குறைந்துள்ளது. ஆஷா திட்டம் மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போது பிரதமாக இருந்த மன்மோகன் சிங்தான், இல்லாவிட்டால் என்னால் எதையும் செய்திருக்க முடியாது.” என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி ராமதாஸ் மன்மோகன் சிங் ஆதரவில்தான் பிரசவ இறப்புகளை தடுக்கும் ஆஷா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது என்று பேசியது பாஜகவினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அது மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நேரத்தில் அன்புமணி இப்படி பேசியதால் டென்சனான பாஜக முக்கிய நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை அன்புமணி தரப்பில் தெரிவிக்க, அதன் காரணமாகவே அன்புமணி மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தும் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார் என்கிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
