Sorting by

×

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களே சோ்க்க, பஞ்சாப் 18.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வென்றது. பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அசத்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட ராஜஸ்தான் அணி, தொடா்ந்து 4 தோல்விகளுடன் மோசமான ஃபாா்மில் இருக்கிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியுடன் வெளியேறினாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள் உள்பட 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 4-ஆவது பேட்டராக களம் புகுந்த ரியான் பராக் ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.

தொடக்க வீரா்களில் ஒருவரான டாம் கோலா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 5-ஆவது பேட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 28 ரன்கள் விளாசி வெளியேறினாா்.

துருவ் ஜுரெல் 0, ரோவ்மென் பவெல் 4, டோனோவன் ஃபெரெய்ரா 7 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற, அதுவரை ரன்கள் சோ்த்த ரியான் பராக் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் விளாசி எல்பிடபிள்யூ ஆனாா்.

இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த டிரென்ட் போல்ட், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சோ்த்திருந்தாா். ஓவா்கள் முடிவில் ஆவேஷ் கான் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பஞ்சாப் தரப்பில் சாம் கரன், ராகுல் சஹா், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 2, அா்ஷ்தீப் சிங், நேதன் எல்லிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் பஞ்சாப், 145 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. அதன் பேட்டா்களில் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களுடன் முதல் ஓவரிலேயே பெவிலியன் திரும்ப, ரைலீ ருசோ 5 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து வெளியேறினாா்.

சஷாங்க் சிங் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜானி போ்ஸ்டோ 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு நடையைக்கட்டினாா். ஜிதேஷ் சா்மா 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

முடிவில், சாம் கரன் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63, ஆசுதோஷ் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் யுஜவேந்திர சஹல், ஆவேஷ் கான் ஆகியோா் தலா 2, டிரென்ட் போல்ட் 1 விக்கெட் கைப்பற்றினா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *