சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 14 பேருக்கு இன்று (மே. 15) குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுதில்லியில் உள்துறை அமைச்சக செயலர் அஜய் குமார் பல்லா 14 பேருக்கும் இந்திய குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கியதோடு அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முறையாக 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இச்சட்டத்திற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’ நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற பெயரில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்ததன் மூலம், இச் சட்டம் நாடு முழுவதும் மார்ச்சில் அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த இரு மாதங்களாக ஹிந்து, சீக்கியம், சமணம், புத்த மதம், பார்ஸி, கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்த 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு முன், இந்தியாவில் குடிபெயர்ந்துள்ள மக்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அவையனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்குகிறார்இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு
அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிக்கள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இச் சட்டம் வகை செய்கிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
