தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் போதைப் பொருள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டது முதல் போதைப் பொருள் விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் மிகப்பெரியளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை செய்ததில், சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன், எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
போதைப் பொருள்
மேலும், இந்த வழக்கில் ஐந்து பேரைக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்திருப்பது குறித்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,“சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா தி.மு.க ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, தி.மு.க அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களைக் கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டைப் போதைப் பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது, சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாகத் தமிழ்நாட்டை மாற்றிய விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாகச் செயல்படுமாறு இந்த விடியா தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.
கர்நாடகா டு கோவை: 1 லட்சம் போதை மாத்திரைகள் விற்பனை… வசமாக சிக்கிய `நெட்வொர்க்’
