Sorting by

×

புது தில்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்தான் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் 38 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேசிய அளவில் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான வாக்குப் பதிவு என்றாலும், காஷ்மீரில் முந்தைய தோ்தல்களுடன் ஒப்பிடும்போது இது அதிக வாக்குப் பதிவாகும். 1996-க்குப் பிறகு இது அதிகபட்ச வாக்குப் பதிவாகும்.

ஏனெனில் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் 2019 தோ்தலில் 14.43 சதவீதம், 2014-இல் 25.86 சதவீதம், 2009-இல் 25.55 சதவீதம், 2004-இல் 18.57 சதவீதம் அளவுக்கே வாக்குகள் பதிவாகின.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமா் மோடி தலைமையிலான அரசின் முடிவு வாக்குப் பதிவில் எதிரொலித்துள்ளது. காஷ்மீா் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது.

தோ்தலில் உற்சாகமாக வாக்களித்ததன் மூலம், சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிா்த்தவா்களுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுத்துள்ளனா்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதன் பிறகு அங்கு நடைபெறும் முக்கியமான தோ்தல் இதுவாகும்.

ஜம்முவில் உள்ள 2 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக, காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. அங்கு ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியும், மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் முக்கியப் போட்டியாளா்களாக களத்தில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *