தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தைச் சேர்ந்தவர் இரா.நல்லகண்ணு. ராம பக்தரான தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்காகத் தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது போராட்டக் களத்தில் நின்று எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

குடும்பம் மற்றும் கொள்கை:
சிறையிலிருந்து திரும்பிய பின், தந்தையின் கறாரான நிபந்தனைக்கிணங்க 1958-ல் ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம் ஆசிரியையாகப் பணிபுரிந்து நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கைக்குப் பெரும் துணையாகத் திகழ்ந்தார். இந்தத் தம்பதியினருக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர்.
விவசாய இயக்கப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகள் எனப் பதினெட்டு வயதில் தொடங்கிய பணிகளை சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார். தமிழ்நாடு முழுக்க இவரது கால் படாத குக்கிராமங்களே இருக்காது எனச் சொல்லலாம். கட்சிப் பணிகளுக்காக வீட்டிலிருந்து கிளம்பிப் போனால் வீடு திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகுமென நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.
போராட்டக்களமே வீடு:
தோழர் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் சுமார் 12-13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். கட்சியின் விதியின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என இருந்தபோதிலும், அவரது அர்ப்பணிப்பு காரணமாக அனைத்திந்திய தலைமை விதியைத் திருத்தி நான்கு முறை பதவி வகிக்க அனுமதித்தது.
சாதி, மத, வர்க்க பேதங்களுக்கு எதிராகப் போராடும் இவரிடம் தன்னலம் என்பது துளியும் இல்லை என அவருடன் பயணித்த பலரும் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குச் சான்றாக, கட்சி தனது பிறந்தநாளில் வழங்கிய ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மீண்டும் கட்சிக்கே வழங்கினார். அதேபோல் தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் விவசாயச் சங்கத்திற்கும் கட்சிக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

முதுமையும் – உடல்நலமும்
2016-ல் தன் மனைவி ரஞ்சிதத்தை இழந்த நல்லக்கண்ணு வயது முதிர்வு காரணமாக இல்லத்தில் ஓய்வில் இருந்தார். ஆனாலும் அவ்வப்போது பொது மேடைகளில் அவரைக் காணமுடிந்தது. இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஆனால், கடந்த சில மாதங்களாக அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுவதுமாக இருந்தார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழர் நல்லக்கண்ணுவுக்கு செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்தும், உடல் நலன் குறித்தும் விசாரித்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு இன்று (25.02.2026) மதியம் 1.15 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
