Sorting by

×

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து ஓ.பி.எஸ் உடனே திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன், திமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கட்சியில் இணைந்திருக்கிறார். ஏன் இந்தத் திடீர் முடிவு என அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அய்யப்பன்
அய்யப்பன்

திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் கட்சியிலிருந்து விலகியிருக்கிறீர்களே என்றவுடன் கடகடவெனப் பேசத் தொடங்கும் ஐயப்பன், ”ஓ.பி.எஸ் எனக்கு துரோகத்தின் உச்சத்தைக் காட்டிவிட்டார். இவ்வளவு பெரிய துரோகியைப் பார்த்ததே இல்லை. நான்கு ஆண்டுகளாக அவருடன் விசுவாசமாகப் பயணித்தேன்.

திமுகவுக்கு என்னை அழைத்து செல்லும்போது சீட் மற்றும் கௌரவமான பதவிகளை வாங்கித் தருகிறேன் என்று உறுதிக் கொடுத்துதான் அழைத்துப் போனார். ஆனால், இப்போது அவர் மட்டும் சீட் வாங்கிக் கொண்டார். எங்களால் திமுகவினருடன் ஒத்துப்போக முடியவில்லை.

அவர்கள் எங்களை வெளியாட்களைப் பார்ப்பதைப் போல இருந்தது. ஆனாலும் ஓ.பி.எஸ் நினைத்திருந்தால் எனக்கு சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். திமுக மேலிடமே ஓ.பி.எஸ்ஸிடம் உசிலம்பட்டியில் ஒரு கூட்டம் போட்டு பேசுங்கள் என்றனர்.

அய்யப்பன்
அய்யப்பன்

ஆனால், ஓ.பி.எஸ் அதையும் செய்யவில்லை. மாவட்டச் செயலாளர் மணிமாறனும் ஒத்துழைக்கவில்லை. உசிலம்பட்டி தொகுதிக்காக நேர்காணலுக்குச் சென்று வந்தேன். ஸ்டாலின் தொகுதியைப் பற்றி கேட்டுக் கொண்டார். அதெல்லாம் நல்லபடியாகத்தான் போனது. வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என நம்பினேன்.

ஆனால், திடீரென ஓ.பி.எஸ் வந்து, ‘என்னை அழைத்து ‘கூட்டணி நெருக்கடியால் உசிலம்பட்டி தொகுதியை கூட்டணிக்கு அளிக்கிறோம்’ என்றனர். நானும் சரி எனக் கூறிவிட்டேன்’ எனக் கூலாகச் சொன்னார். அப்போதுதான் எனக்கு உறைத்தது. அவருக்கு மட்டும் சீட் வாங்கிவிட்டு என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டார். அதிமுகவில் சேர்க்கவில்லை என்பதற்காக அரசியல் செய்ய முடியாமல் சங்கரமடத்துக்குச் செல்ல முடியுமா என அறிவாலயத்தில் ஓ.பி.எஸ் கேட்டாரே.

அய்யப்பன்
அய்யப்பன்

75 வயது ஓ.பி.எஸ் சங்கரமடத்துக்குச் செல்ல முடியாது என்றால், 58 வயது அய்யப்பன் மட்டும் செல்ல முடியுமா? என் தொகுதி மக்கள் நான் போட்டியிட வேண்டுமென விரும்புகிறார்கள். அதனால்தான் சின்னம்மா தரப்பை தொடர்புகொண்டேன்.

அவரும் வாஞ்சையோடு அழைத்துக் கொண்டார். ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்து Form A&B யோடு ஊருக்கு வந்திருக்கிறேன். சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யப்போகிறேன்” என்றார்.

‘சசிகலாவுக்கு இந்தத் தேர்தலில் என்ன வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ”நான் என் தொகுதியில் வென்றுவிடுவேன். உசிலம்பட்டிக்கு சின்னம்மாவை அழைத்து வந்து விழா எடுப்பேன்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *