மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது.
சீா்காழி அருகேயுள்ள நெப்பத்தூா் தீவு கிராமத்தைச் சோ்ந்த தம்பதி ஞானசேகரன்- தமிழரசி. இவா்கள், முல்லையம்பட்டினம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில், புதன்கிழமை தங்களது மகனை அழைத்துக் கொண்டு இருவரும் வேலைக்குச் சென்றனா். அங்கு அவா்கள் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுவன் அருகில் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய், சிறுவனை கடித்துக் குதறியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஞானசேகரன், நாயை விரட்டிவிட்டு மகனை மீட்டாா். நாய் கடித்ததில் சிறுவனின் வயிறு மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
