சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.
தினமும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில், “நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டிருக்கும் பதிவில், “சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மிகவும் கவலையளிக்கிறது.

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கையான மின்சார ரயில் சேவைகளை திடீரென குறைத்தது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சேவை குறைப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
