Sorting by

×

2007ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், `வழக்கறிஞர்கள் வழங்கும் சேவைகளும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் பிரிவு 2(o)இன் கீழ் அடங்கும்’ எனத் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2009இல், இந்த உத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு விதித்திருந்தது. நீண்ட நாள்களாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் , நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின்போது, ஒரு வழக்கறிஞர் என்பவர் தனது கட்சிக்காரருக்காக வாதிடுபவர் மட்டுமல்ல, அவர் நீதிமன்றத்தின் அதிகாரியும் (Officer of the Court) ஆவார். ஒரு வழக்குரைஞருக்கு நீதிமன்றத்தின் அதிகாரியாக அவரின் கடமைகளை நிறைவேற்றும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.

உத்தரவு

இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில், 2007ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது.

“சட்டத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களின் பணியை மற்ற தொழில்களுடன் ஒப்பிட முடியாது. இங்கு, வழக்கறிஞருக்கும், அவரது கட்சிக்காரருக்குமான உறவு, தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. வழக்கறிஞர்கள், கட்சிக்காரர்களின் முகவர்களாகச் செயல்படுகின்றனர். அவர்கள் கட்சிக்காரர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேவைகளுக்காக மட்டுமே நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர். இதில் வழக்கறிஞர்களுக்கு, சில கட்டுப்பாடுகளும் கட்சிக்காரர்களால் விதிக்கப்படுகின்றன. இதனால் வழக்கறிஞருக்கும், அவரது கட்சிக்காரருக்கும் இடையிலான உறவு ஒரு தனிப்பட்ட சேவையின் ஒப்பந்தமாகும். இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் பிரிவு 2(42) இல் உள்ள “சேவை” என்ற வரையறையிலிருந்து விலக்கப்படும்” என தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவாதங்களின்போது, மருத்துவத் தொழில், எப்படி சட்டத் தொழிலில் இருந்து வேறுபட்டது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள், மருத்துவச் சேவைகள் சம்பந்தமாக பொறுப்பேற்கவேண்டும் என இந்திய மருத்துவச் சங்கம் எதிராக வி.பி. சாந்த்னா (1995) 6 SCC 651 என்ற வழக்கின் தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த பெஞ்ச், தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தது.

இந்த தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசித்த நீதிபதி திரிவேதி, “வழக்கறிஞர் தொழிலில் வழங்கப்படும் சேவை என்பது மற்ற தொழில் மற்றும் வணிகத்தில் வழங்கப்படும் சேவைகளை விட மாறுபட்டது” எனத் தெரிவித்தார். “இங்கு, வழக்கறிஞரின் தொழிலுக்கு உயர் கல்வி, திறன் மற்றும் கடின உழைப்பு தேவைப்படுகிறது. மேலும், இங்கு வெற்றி என்பது வழக்கறிஞரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. எனவே, வழக்கறிஞர் தொழில் சார்ந்த சேவைகளை பிற துறைகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக கருத முடியாது” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இவ்வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 14ஆம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பில், `ஒரு நுகர்வோர் தீர்ப்பாயத்தின் உத்தரவு என்பது வழக்கறிஞரின் வேலையை மட்டும் சார்ந்து இருக்காது என்பதால், ஒரு வழக்கின் சாதகமான முடிவுக்கு வழக்கறிஞரை மட்டும் பொறுப்பாக்க முடியாது . இதற்காக “சேவைக் குறைபாடு” என்ற நோக்கத்தில் வழக்குரைஞர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *