Sorting by

×

கடந்த 2007-ம் ஆண்டு, மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சரியான முறையில் பணியாற்றாவிட்டால் அவர்கள் மீது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,(Consumer Protection Act) 1986-ன் கீழ் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என தேசிய நுகர்வோா் குறைதீா்ப்பு ஆணையம் (National Consumer Disputes Redressal Commission (NCDRC)) தீர்ப்பு வழங்கியது. ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு வழங்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஆணையத்தின் தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

நுகர்வோர் நீதிமன்றம்

இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பு நாளை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பு நாளான நேற்று முந்தினம் நீதிபதிகள் அதிரடியான தீர்ப்பை வழங்கியதோடு அதற்கான விளக்கங்களையும் அளித்திருக்கின்றனர்.

குறிப்பாக நீதிபதிகள் திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மற்ற தொழில்களைக் காட்டிலும் வழக்கறிஞர் தொழில் என்பது மிகவும் தனித்துவமானது; சிறப்பு வாய்ந்தது. அந்தத் தொழிலை மற்ற தொழில்களுடன் ஒப்பிடவே முடியாது. தனது மனுதாரர் ஒருவருக்காக வழக்கறிஞர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவது என்பது அவரின் தனிப்பட்ட பணியாகும். அதேபோல, வழக்கின் வெற்றி என்பது வழக்கறிஞரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல்வேறு காரணிகளையும் சார்ந்திருக்கிறது.

குறிப்பாக, ஒரு வழக்கறிஞர் தனது பணியின்போது தனது கட்சிக்காரரின் (மனுதாரர்) ஆலோசனை மற்றும் நேரடி கட்டுப்பாடுகளின் அடிப்படையில்தான் வாதிடுகிறார். இருவருக்குமான உறவு என்பது தனித்துவமான பண்புகளைக் கொண்டது. மனுதாரரின் முகவர்களாகத்தான் வழக்கறிஞர்கள் செயல்படுகிறார்கள். எனவே, தனது சேவைகளை வழங்கும் விதத்தில் வழக்கறிஞர்களுக்கு மனுதாரர்களால் கணிசமான அளவு நேரடி கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் வழக்கறிஞர்களுக்கும், அவர்களின் மனுதாரர்களுக்கும் இடையிலான உறவு என்பது ஒரு தனிப்பட்ட சேவையின் ஒப்பந்தமாகவே இருக்கின்றன. ஆகவே, வழக்கறிஞர் தொழில் சேவையை பிற துறைகளில் வழங்கப்படும் சேவைகளைப் போல கருத முடியாது!” என வழக்கறிஞர் தொழில் குறித்து நீண்ட விளக்கமளித்தனர்.

நீதிபதிகள்

மேலும், “வழக்கறிஞர்களுக்கும், அவர்களின் மனுதாரர்களுக்கும் இடையிலான உறவு என்பது ஒரு தனிப்பட்ட சேவையின் ஒப்பந்தமாக இருப்பதால், அதை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 2 (42)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘சேவைகள்’ என்ற வரம்புக்குள் கொண்டு வர முடியாது. முறையற்ற வணிகம் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் இருந்து வாடிக்கையாளா்களை பாதுகாக்கவே 1986-இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் சில சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2019-ல் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு பணியாளரையோ சேவைகளையோ கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை!” எனத் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வாசித்த நீதிபதிகள், “நுகர்வோர் சட்டத்தின் கீழ் அனைத்துப் பணிகளும் அடக்கப்பட்டு, பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒவ்வொருவரும் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் குவிந்துவிடும். மேலும், வழக்கறிஞர் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டது அல்ல; மாறாக அது மக்களுக்கு சேவை செய்யும் உயர்ந்த பணி. எனவே, மற்ற வணிக ரீதியிலான பணிகளிலிருந்து வழக்கறிஞர் பணி வேறுபடுவதால், வழக்கறிஞர்களுக்கு எதிராக `சேவை குறைபாடு’ என புகாரளிப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகாது. எனவே, `சேவைக் குறைபாடு’ என்ற நோக்கத்தில் வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது!” என உத்தரவிட்டு, தேசிய நுகர்வோா் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பை ரத்து செய்தனர்.

மேலும், வழக்கறிஞர்களைப் போலவே, `மருத்துவர்களின் மருத்துவச் சேவைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்’ என்ற முந்தைய வழக்கின் தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிசீலனை செய்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *