Sorting by

×

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரம் என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்களை அழைத்து கூட்டத்தை திரட்டினர்.

கோவை தேஜகூ ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை தலைமையில், வேலுமணி முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை தலைமையில் எஸ்.பி வேலுமணி கலந்துகொள்வதா என்று அதிமுக தொண்டர்கள் குமுறினார்கள்.

மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லோரும் குறித்த நேரத்தில் வந்துவிட, மாலை 6 மணியளவில் தான் வேலுமணியும், அண்ணாமலையும் மேடை ஏறினார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தாமதமானதாக சொல்லப்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஜிடி மேம்பாலத்தில் நிலவிய கடுமையான போக்குவரத்தில் அண்ணாமலை சிக்கிவிட்டார். ஒருகட்டத்தில் அவர் நடந்தும், அந்த வழியே பைக்கில் வந்தவர்களின் உதவியை கேட்டும்  ஆர்ப்பாட்டத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆர்ப்பாட்டம் பெண்கள் பாதுகாப்புக்காக நடந்தாலும் ஏற்கெனவே சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். கோவையிலும் அதிமுக நிர்வாகிகள் சர்ச்சையில் சிக்கினார்கள். அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன், “மகளிருக்கு ரூ.5,000 பணத்தை ஏன் அதிகாலை 5 மணிக்கு செலுத்த வேண்டும். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தொகையை செலுத்தவே கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளனர். மூக்குத்தி உள்ளதா, கம்மல் உள்ளதா என கேட்கிறார்கள். விட்டால் புருஷன் இருக்கிறாரா” என்று கேட்பார்கள் என பேசினார்.

கோவை தேஜகூ ஆர்ப்பாட்டம்

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது கூட்டத்தில் சில பெண்கள் அதை கவனிக்காமல் ஏதோ பேசியுள்ளனர். கடுப்பான ஜெயராமன், “ஏம்மா.. நீங்கள் 4 பேர் பேசிட்டே இருக்கீங்க. நீங்க பேசற மாதிரி இருந்தால் நான் மைக் கொடுக்கறேன். நீங்களே பேசுங்க” என்று கடிந்து கொண்டார். அடுத்தடுத்து 2 சீனியர் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

எஸ்.பி வேலுமணி பேசும்போது, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு பெண்ணை எரித்து கொலை செய்தனர். அதுகுறித்து ஊடகங்களுக்கு தகவல் கொடுக்காமல் காவல்துறை மறைத்துவிட்டது. கோவையில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களை காப்பாற்ற முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலில் கொலுசை காட்டி ஏமாற்றினார்கள். இப்போது கோவை மாநகரில் சாக்கடை கூட சுத்தம் செய்யப்படுவதில்லை” என்றார்.

அண்ணாமலை

கடைசியாக பேசிய அண்ணாமலை, “ஸ்டாலின் ரீல்ஸ் முதலமைச்சராக மட்டுமே இருக்கிறார். வேறு எதிலும் அக்கறை காட்டுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 1,495 கோடி மதுபாட்டில்கள் விற்கப்பட்டுள்ளன. பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ரூ.14,950 கோடி பணத்தை செந்தில் பாலாஜி வசூல் செய்துள்ளார். தீய சக்தியை தூக்கி எறிய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் நம்மை மன்னிக்காது. அனைவரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணி வகுத்து செல்ல வேண்டிய  கட்டாயம் இருக்கிறது” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *