2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற பல முன்னெடுப்புகளை செய்கிறார்கள். வெற்றியை குறி வைத்து வியூகங்கள் வகுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் எட்டு தொகுதிகளையும் கைபற்ற திமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது.

திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு காய் நகர்த்துகின்றனர்.
திமுக தலைமை யாருக்கு சீட் என்பதை இறுதி செய்யும் போது மாவட்ட செயலாளரின் பரிந்துரையும் முக்கியம் என்பதால் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரனை வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் மொய்க்கின்றனர். அவரும் உனக்கு தான் சீட்னு ஒவ்வொருவரிடத்திலும் சொல்லி குஷி படுத்தி வருகிறாராம். இதனால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரியாமல் சஸ்பென்ஸ் நீடிப்பதால் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தஞ்சாவூர் தொகுதியில் திமுக-வில் போட்டியிடுவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட டி.கே.ஜி. நீலமேகம் கிட்டதட்ட 45,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை வீழ்த்தினார். இந்த முறை அதிமுக-வில் என்.எஸ்.சரவணன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டது என்கிறார்கள்.
சரவணனும் தொகுதிக்குள் வலம் வருவதுடன் சத்தமில்லாமல் பிரச்சாரமும் செய்து வருகிறார். தஞ்சாவூர், திமுக-விற்கு சாதகமான தொகுதி என பேசப்படுவதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை செய்தால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தொகுதிக்குள் பம்பரமாக சுழல்கிறார்.
தஞ்சாவூர் தொகுதியை திமுக-வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதையே தனக்கான பாசிட்டிவ் பாயிண்டாக எடுத்து கொண்டு களம் காண காத்திருக்கிறார் அதிமுக சரவணன்.
திமுக-வை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன், நடிகர் துரை.சுதாகர், சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே ரேஸில் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே மேயர் சண்.இராமநாதன் பெயர் பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வீட்டின் மாடியில் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். அந்த அறையின் சுவற்றில் கருங்கல்லால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உருவத்தை செதுக்கி பொருத்தியுள்ளார்.
இதை பாத்து வியந்த பலரும் அவரை பாராட்ட, தலைமுறைகளை கடந்தும் என் வீட்டில் இந்த சுவர் சிற்பம் இருக்கும், ராஜாஸ்தானில் இருந்து ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் என் தலைமுறைகளை கடந்தும் எங்களுக்கு தலைவர்கள் என்றாராம். தான் கட்சிக்கான விசுவாசி என்பதை உணர்த்துவதற்காக இராமாநாதன் இதை செய்துள்ளார்.

நடிகர் துரை.சுதாகர் பண பலம் படைத்தவர் செலவுக்கு தயங்காதவர். நன்கொடைனு யார் கேட்டாலும் முகழ் சுழிக்காமல் செய்யக்கூடியவர். தனக்கு ஒரு பெயர், கூட்டத்துடன் வலம் வரக்கூடியவர். சினிமா தொடர்பு அதிகம். நடிகர், தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் தொகுதிக்குள் வலம் வரும் தனக்கு நெருக்கமான மேலிட வட்டம் மூலம் சீட்டுக்கு காய் நகர்த்துகிறார். சுதாகருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.
துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தஞ்சையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றுள்ளார். இம்முறை தன்னை தலைவர் ஸ்டாலின் கைவிட மாட்டார் என்பது மட்டுமே அவரது நம்பிக்கை.
செந்தமிழ்செல்வன் தஞ்சாவூரில் அடையாளமான குடும்பத்தை சேர்ந்தவர். துரை.சந்திரசேகரினின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். துரை.சந்திரசேகரன் பரிந்துரை இவருக்கு இருக்கும் என்கிறார்கள். இப்படியாக பலரும் சீட்டை முன் வைத்தே ஒவ்வொரு வைத்து முன்னெடுப்பை செய்கின்றனர்.
இதில் சண்.இராமநாதன், துரை.சுதாகர், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தனி தனியாக சந்திரசேகரனுடன் காரில் அவ்வப்போது ஒன்றாக செல்லும் போது உனக்கு தான் சீட் என்கிறாராம். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் சொல்ல அவர்கள் தனக்கு தான் சீட் என்கிற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். ஆதரவாளர்களுடன் தனியாக இருக்கும் போது ஒவ்வொருவரிடத்திலும் இதை சொல்ல அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. இப்பவும் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற சஸ்பென்ஸ் நீள்கிறது. இதனால் கட்சியினரும் குழப்பத்தில் உள்ளதாக’ தெரிவித்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
