Sorting by

×

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்ளிட்ட எட்டு முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்த அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மார்ச் 13-ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டின் பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதிகளின் கீழ், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

இதன் மூலம் தமிழகத்தின் தொன்மையான நகர நாகரிகத்தை வெளிக்கொணரும் அடுத்தகட்டப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக, தமிழக அரசு தனது 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடதக்கது.

எனவே, மத்திய அரசு வழங்கியிருக்கும் ஒப்புதலின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11-ம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர், தென்காசி மாவட்டத்தின் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டத்தின் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், கோவை மாவட்டத்தின் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தின் தெலுங்குனூர்-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய வரலாற்றுத் தளங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள இந்த விரிவான ஆய்வுகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகத் தமிழகத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அனுமதி கிடைக்கத் தாமதமானதால், களப்பணிகள் பருவமழைக் காலத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவானது.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்த நேரடி வேண்டுகோளில், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பணிகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முதல்வரின் இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பண்டைய துறைமுக நகரமாகத் திகழ்ந்த பூம்புகார் கடற்கரைப் பகுதியில், நீருக்கடியில் மறைந்துள்ள வரலாற்றுச் சான்றுகளைத் தேடும் ஆய்வுகளுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சென்னனூர் அகழ்வாராய்ச்சி
சென்னனூர் அகழ்வாராய்ச்சி

பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினத்தின் கடல்சார் வணிகத் தொடர்புகளைக் கண்டறியும் வகையில், கடந்த செப்டம்பர் 2025 முதல் அந்தப் பகுதிகளில் நீருக்கடியிலான ஆய்வுகள் (Underwater Survey) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நிலப்பரப்பில் எட்டு இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளதால், தமிழகம் முழுவதும் வரலாற்றுத் தேடல் ஒரு புதிய வேகத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *