திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் பல மாநிலங்களில் இது வரை நான்கு கட்டஙகளாக 380 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா
இனிவரும் தொகுதிகள் பா.ஜ.கவிற்கு போனஸ்தான். நாட்டு மக்களின் மன நிலையும் மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டும் என்பதுதான். வயநாட்டில் தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி தோற்றுப்போவது தெரிந்து தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகள் உத்திர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு 77 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும் என கூறியுள்ளது. தி.மு.க என்பது ஒரு குடும்பத்திற்கு சேவை செய்யும் கட்சியாக உள்ளது. யூடியுபர் சவுக்கு சங்கர் நேர்மையானவர் கிடையாது.
யாரையும் மரியாதைக் குறைவாக பேசுவதே அவரது குணம். அவரை கைது செய்ததில் ஆட்சேபனை இல்லை. ஆனால், கைது செய்த பிறகு கையை போலீஸார் உடைத்துள்ளது நீதிமன்றத்தில் நிருபணமாகி உள்ளது. இது போலீஸாரின் மோசமான நடவடிக்கை. இதே போல பேசிய தி.மு.க அமைச்சர்கள் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடிகை ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் கேவலமாக பேசியுள்ளார். தி.மு.க ஒரு பாசிச சக்தி. தி.மு.கவின் அடையாளமே அதுதான்.
ஹெ. ராஜா
முதல்வர் ஸ்டாலின், தன் கீழுள்ள காவல் துறையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸுக்கு பயிற்சி கொடுக்கப்போகிறதாகச் சொல்லியிருக்கிறார். உங்கள் வீட்டில் இருந்தவர்தானே ஜாபர் சாதிக். அவர் போதைப்பொருள் விற்ற ரூ.2,000 கோடி பணத்தில்தான் சினிமாவுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
தமிழகத்தில் காட்டு தர்பார் நடந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தவறு நடந்து கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான 300 டிப்போக்கள் ரூ 3,000 கோடிக்கு அடமானத்தில் உள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சி.ஏ.ஏ என்பது மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படுவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் சீக்கியர்கள் பெளத்த மதம் உள்ளிட்ட வேறு மதத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர்.
ஹெச்.ராஜா
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டுமென சொல்லி இருக்கிறோம் யாருக்காவது குடியுரிமையை எடுக்க வேண்டும் என கூறவில்லை. ஆன்லைன் மூலமாக குடியுரிமை கேட்டால் மத்திய அரசு அவர்களுக்கு ஆன்லைன் மூலமே குடியுரிமை வழங்கும். இதில் மாநில அரசு தலையிட முடியாது. தமிழகம், கேரளா முதல்வர்கள் அரசியலமைப்பு சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சட்ட அறிவு இல்லாதவர்கள் முதல்வராக வந்திருப்பது நமது துரதிஷ்டம்.” என்றார்.
