Sorting by

×

காட்பாடி: தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெலங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(மே 17) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தெலங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வந்தே பாரத் ரயில் தற்போது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் திட்டத்தினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்க் கட்சியினர் பிரித்து ஆள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்தையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

நடைபெற்று முடிந்த நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டிஎம்சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை.

காங்கிரசும் திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உதகையில் முக்கிய இரு சுற்றுலாத் தலங்கள் தற்காலிக மூடல்: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை ஆனால் அதிகமாக டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்துள்ளார்கள் இதுதான் திமுகவின் சாதனை.

திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. எனவே தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றம் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே திமுகவினருக்கும் சிறை துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது.

போதைப்பொருள்கள் விற்பனையில் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவிற்கு தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதைப்பொருள்கள் தான் காரணம்.

எனவே போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா பொருள்கள் விற்பனை தொடர்பாக, சிறை துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் போதை மற்றும் வன்முறை கலாசாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் அதிகரிக்க வேண்டும்.

காவிரி பிரசனையில் அதிகாரிகள் நேரடியாகச் சென்று விவாதிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்க தமிழக அரசு ஊக்கப்படுத்தாதது ஏன்?. காவிரியில் தண்ணீர் கொண்டு வருவதில் தமிழக அரசு தீவிரம்காட்ட வில்லை என்று தனக்கு தோன்றுகிறது.

கலைஞர் குறித்து 9 மற்றும் 10 வகுப்பு பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்து தற்போது 8 ஆம் வகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

பாஜக கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள் இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாடப் புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்கிறார் இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *