தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
அதேபோன்று, மத்திய மோடி அரசு தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து துரோகமிழைத்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீட்டை ஒதுக்க மறுப்பது, கல்விக்கான நிதி ஒதுக்க மறுப்பது; நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பது; 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை நிலுவை வைப்பது; தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பது; தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது; கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற தமிழக விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி பாக்கித் தொகையை உடனடியாக விடுவிக்கவும், சமக்ரா ஷிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை வழங்கிடவும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.04.2025 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்கள், மற்றும் கட்சி தோழர்கள் திரளாகக் கலந்துகொள்கின்றனர். தமிழகம் மற்றும் மக்கள் நலன் காக்க நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் பேராதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! – திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI