Sorting by

×

புதுச்சேரிக்கு இன்று வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, “புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. நம்முடன் இணைந்து நம்முடைய கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம், உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

நம்முடைய அக்கா, நம்முடைய தங்கை, நம்முடைய அண்ணன், தம்பி என நம்முடைய புதுச்சேரி வேட்பாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து உங்கள் முன்னால் அறிவித்துவிட்டேன். அவர்களை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதுச்சேரியில் விஜய்
புதுச்சேரியில் விஜய்

நம்முடைய வேட்பாளர்கள் அனைவருக்கும் உங்கள் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். அதேபோல நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களுடைய சின்னத்திலும் வாக்களியுங்கள். தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகிறது.

இங்கு இரண்டு கூட்டணிகள் உள்ளன. `நீங்கள் தனியாக வந்து என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதற்குப் பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை அல்லவா?

ஆனால் அதைச் சொல்வதற்கு முன்னால், இங்கு ஏற்கெனவே இருக்கின்ற கூட்டணிகளைப் பற்றி நீங்கள் சிறிது தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா ? இந்தக் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி இருக்கிறதே, அதில் காங்கிரஸ் மட்டுமே ஆறு முறைக்கும் மேலாக இங்கு ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை.

அவர் தங்களுடைய தலைவரையே வெட்டவெளிச்சமாக எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து ஏளனம் செய்தது. அதற்குப் பிறகு அந்தப் பேரியக்கம் இங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தி.மு.க-வும் இரண்டு, மூன்று முறைக்கும் மேலாக ஆட்சியில் இருந்தது.

இப்போது இரண்டும் கூட்டணி அமைத்துள்ளன. பெயருக்குத்தான் கூட்டணி. ஆனால் தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணி என்று கூறிக்கொண்டே சில தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குழப்பமான அணியாகவே உள்ளது.

புதுச்சேரியிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. அடுத்து இன்னொரு கூட்டணி இருக்கிறதே, அதுதான் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் இணைந்த கூட்டணி. அது இணைந்த கூட்டணி அல்ல. இணைய முடியாமல் சோர்ந்துபோன கூட்டணி.

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள்
புதுச்சேரி தவெக வேட்பாளர்கள்

`கூட்டணி இருக்கிறது’ என்று ஒரு தரப்பும், `கூட்டணி இல்லை’ என்று மற்றொரு தரப்பும் தினந்தோறும் ஒரு செய்தியை வெளியிட்டனர். இதில் நம்மை வைத்து அவர்கள் ஓர் அரசியல் நடத்தினார்கள், அதனைப் பார்த்திருப்பீர்கள்.

இங்கு இன்னொரு அரசியல் வியாபாரமும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் எப்படி இருவர் ரகசியக் கூட்டணி வைத்துள்ளார்களோ, அதே சூத்திரம்தான் புதுச்சேரியிலும் கையாளப்படுகிறது.

நம்மைப் பற்றித் தவறான கதைகளைக் கூறினார்கள் அல்லவா, இப்போது என்னவாயிற்று? நாம் தனியாகப் போட்டியிடும்போதே, நாம் யாருடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உறவு வைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிந்துவிட்டது. நாம் மக்கள் பக்கம் நிற்கிறோம். மக்கள் நம் பக்கம் நிற்கிறார்கள்.

அப்படி இல்லாமல், யார் எப்போது யாருடைய முதுகில் குத்துவார்கள் என்கிற அச்சத்தோடு சுற்றினால் அந்தக் கூட்டணி வெற்றி பெறாது. அது முற்றிலும் தோல்வியைத் தழுவும். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இந்தக் காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஆகிய இரண்டு கூட்டணிகள் இருக்கிறீர்கள் அல்லவா?

இரண்டு கூட்டணிகளிலும் இருக்கின்ற கட்சிகள் ஒன்றியத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள்தானே? இப்பொழுதும் ஆட்சியில் இருப்பவர்கள் தானே?

இந்தப் புதுச்சேரி மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கை எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது? அதனை காங்கிரஸ் அரசாங்கமும் கொண்டு வரவில்லை, பா.ஜ.க அரசாங்கமும் கொண்டு வரவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கலாம் என்று மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் குழு ஓர் அறிக்கை சமர்ப்பித்தது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

இருபது ஆண்டுகளுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை குறித்து, இதுவரை ஒரு அரசாங்கம் கூட அதனைக் கண்டுகொள்ளவில்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு இங்குள்ள காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியோ அல்லது பா.ஜ.க கூட்டணியோ பதில் அளிக்குமா? நேரடியாகக் கேட்கிறோம்.

மனச்சாட்சி இருந்தால், மக்கள் மீது அக்கறை இருந்தால், இந்தக் கோரிக்கையை ஏன் இவ்வளவு காலம் இழுத்தடிக்கிறீர்கள்? இப்படி நாம் கேட்டவுடன், அவர்களிடம் முறையான பதில் இல்லாத காரணத்தினால் என்ன கூறுவார்கள் தெரியுமா?

‘இந்த விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை’ என்று கூறுவார்கள். அப்படித்தான் நான் கடந்த முறை புதுச்சேரி வரும்போது ரேஷன் கடைப் பிரச்னையைப் பற்றி ஒன்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு வாதத்திற்கு நான் தெரியாமல் கூறினேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அன்றே ‘விகடன்’ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.

சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ என்று அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆளுநராக இருந்த கிரண் பேடி அவர்கள், அரிசி கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் மக்களுக்குப் பணம் செலுத்துவதற்கு உத்தரவிட்டார்.

ரேஷன் கடை என்று முறையாக இருந்த இடங்களுக்குப் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. அதனால் அந்தக் கட்டிட உரிமையாளர்கள் கடையைப் பூட்டிவிட்டனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஆங்காங்கே பள்ளிகளில் வைத்துதான் அரிசி மட்டும் வழங்குகிறார்கள். அதுவும் இப்போதுதான் சில காலமாக வழங்கப்படுகிறது. அதைவிட இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது.

‘விஜய் தெரியாமல் கூறுகிறார்’ என்று அமைச்சர்கள் முதல் அரசாங்கத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் கூறினீர்கள் அல்லவா? இப்போது விகடன் கூறியதற்கு என்ன பொருள் என்று அந்த மாண்புமிகு மனிதர்கள் பதில் கூற முடியுமா?

மக்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் துணிச்சல் வேண்டும். இங்கு ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கூட்டணி அது இது என்று கூறி மக்களை ஏமாற்றத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் மக்கள் சார்பாக நாம் வந்து கேட்ட உடனே கோபப்படுகிறார்கள்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *