Sorting by

×

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில்… கலைஞர் கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் செம்மொழி வேளிர் ராமநாதன் ஐயா ஆகியோரின் சிலைகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் கலைஞரின் சிலையையும் சங்கத்தின் முன்னாள் செயலர் செம்மொழி வேளிர் ராமநாதன் ஐயா சிலையையும் உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடியிருக்கிறோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கு அரசு நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடுகிறோம். அதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது இந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

தமிழ் தாய் வாழ்த்து முதன் முதலாகப் பாடப்பட்டது இந்த கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970களில் டாக்டர் கலைஞர் அவர்கள் அந்த தமிழ்த்தாய் வாழ்த்தை `தமிழ்நாடு அரசு வாழ்த்து பாடலாக’ அறிவித்தார். இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான். இதற்கு ஒன்றும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டாம் என்று சில கூட்டம் சொன்னது. இன்னும் சில பேர் சட்டக் கூட்டத்தில் இந்தப் பாடலைப் பாடவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய “மாநில பாடல்” என்ற அறிவித்து, அதைப் பாடும்போது அனைவரும் மரியாதை செய்ய வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் டாக்டர் கலைஞர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதிசெய்த இந்தக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வருவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த தமிழ்ச் சங்கத்தின் மீது கலைஞர் அவர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய தீரா பற்று உண்டு.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1920 களில் முதன்முதலாக தீர்மானம் போட்டது இந்த கரந்தை தமிழ்ச் சங்கம் தான். தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய கையெழுத்து இயக்கமான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி டாக்டர் கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்தவர் செம்மொழி வேளிர் அவர்கள்.

தமிழுக்குத் தனி பல்கலைக்கழகம் தேவை என்று கரந்தை தமிழ்ச் சங்கம் தான் முதன்முதலாக தீர்மானத்தை முன் வைத்தது. எல்லாவற்றையும் விட கூடுதல் சிறப்பு என்னவென்றால், 1937ல் கல்வி நிலையங்களில் இந்தித் திணைப்பைக் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்தது இந்தக் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

நேற்றுகூட தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், திருச்சி ரயில்வே அலுவலக வாயிலில் இந்தியில் எழுதி இருப்பதை எதிர்த்து நம்முடைய கழகத் தலைவர் முதல் எதிர்ப்பு குரலைத் தெரிவித்தார். அதுமட்டுமல்ல இன்றைக்கு `நியூ எஜுகேஷன் பாலிசி’ புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது இந்தியை தமிழ்நாட்டுக்குள் திணிக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுடைய கல்வி நிதியான 3,500 கோடி ரூபாயைக் கொடுக்காமல் இன்றைக்கு ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் அந்த நிதியைக் கொடுப்போம் என்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் அந்த நிதியைக் கொடுப்போம் என்று சொல்கிறது ஒன்றிய அரசு. ஆனால் நம்முடைய முதலமைச்சர் சொல்லிவிட்டார்… 3,500 கோடி அல்ல! நீ பத்தாயிரம் ரூபாய் கோடி கொடுத்தாலும் இந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் என்றைக்கும் இடம் கிடையாது என்று. அந்த உறுதியை நம்முடைய முதலமைச்சருக்கு கொடுத்த முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு இன்றைக்கு இங்கே சிலையைத் திறந்து இருக்கிறோம்.

முத்தமிழ் என்றால் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ், என்று கூறுவார்கள். அதையும் தாண்டி அறிவியல் தமிழை வளர்த்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். கலைஞரின் வழியில் கழகத் தலைவர் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காக இன்றைக்கு ஏராளமான திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் வளர்ச்சிக்காக இவ்வளவு பணிகளைச் செய்து வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு சம்ஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டும்தான் அக்கறைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 2,500 கோடி ரூபாய். ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 147 கோடி ரூபாய். தமிழ்… தமிழ் என்று சொல்லி இன்று மக்களை எல்லாம் ஏமாற்றுகின்ற வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. உண்மையாகத் தமிழுக்கு உழைப்பவர் யார்? போலியாக நடிப்பவர் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

அந்த ஏமாற்று வேலையை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *