Sorting by

×

அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, தி.மு.க-வினர் சிலர் ராமச்சந்திரனுக்கு எதிராகவும் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தும், பிரசாரத்தை முன்னெடுத்திருப்பது தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. ‘2026-ல் காங்கிரஸ் கூட்டணிக்கு அதுவும் திருநாவுக்கரசர் குடும்பத்துக்கு அறந்தாங்கி தொகுதியில் சீட் கொடுக்கவே கூடாது’ என தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி அறந்தாங்கி தொகுதியில் தன்னுடைய மகனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண் - தவெக வேட்பாளருடன்
முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண் – தவெக வேட்பாளருடன்

அதனால், கொந்தளித்த அறந்தாங்கி தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘இம்முறை ராமச்சந்திரனை தோற்கடிக்க வேண்டும்’ என நேரடியாகவும் மறைமுகமாகவும் களத்தில் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஆவுடையார்கோவில் தி.மு.க ஒன்றியச் செயலாளருமான உதயம் சண்முகத்தின் மகன் சரண், ராமச்சந்திரனுக்கு எதிராக வீடு, வீடாக எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்திருப்பதோடு, த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டும் வருகிறார்.

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண் பேசுகையில், “கடந்த 2011 தேர்தலில் திருநாவுக்கரசர், 2016-ல் அவரின் மகன் ராமச்சந்திரன் என இருவரும் அடுத்தடுத்து போட்டியிட்டு தோற்றனர். 3-வது முறை தி.மு.க கூட்டணியில் ராமச்சந்திரனுக்கு  வாய்ப்பு கொடுத்தபோது, தொகுதிக்குள் எதிர்ப்பு இருந்தது. தலைமை வலியுறுத்தியதால், தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கிப் போராடி ராமச்சந்திரனை வெற்றி பெற வைத்தோம்.

ஆனால், அவர் தொகுதிக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. சாதாரண மக்கள் யாரும் இவரைச் சந்திக்க முடியாது. இவர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தி.மு.க நிர்வாகிகள் யாருமே இருக்கமாட்டார்கள். காரணம், அவர்களை இவர் அழைப்பதுகூட இல்லை. தி.மு.க அமைச்சர்களுடன் இணக்கம் காட்டுவதில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சி நடத்தும்  நிகழ்ச்சிகள், போராட்டங்களிலும்கூட இவர் கலந்துகொள்வதில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண்
முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண்

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரான நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரசாரத்தில்கூட பெரும்பாலும் இவர் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்க தி.மு.க-வினர் மட்டும் இவருக்காக எப்படி ஆதரவு பிரசாரம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இவர்களின் கான்ட்ராக்ட் கமிஷன் பிரச்னையால், பல்வேறு சாலைப்பணிகள் கிடப்பில் கிடக்கின்றன.

தொகுதி மக்கள் அனைவருமே ராமச்சந்திரன் மீது கடும் அதிருப்தியில்தான் இருக்கின்றனர். 20 ஆண்டுக்காலமாக திருநாவுக்கரசர் குடும்பத்திற்காக உழைத்துவிட்டோம். இந்த முறையாவது, உதயசூரியன் உதிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தோம். நான் மட்டுமல்ல, 90 சதவிகித அறந்தாங்கி தி.மு.க-வினரின் ஆசையும் இதுதான். காங்கிரஸ் கட்சிமீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ராமச்சந்திரனுக்கு சீட் கொடுத்திருப்பதுதான் பிரச்னையே. கண்டிப்பாக ராமச்சந்திரன் டெபாசிட் இழப்பார். எனவேதான் த.வெ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறேன்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

என்னைப் போல வெளியில் சொல்ல முடியாத மனக்குமுறலில் பலர் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் வெளியே வந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். தி.மு.க தாய்கழகத்தை விட்டு வேறு எந்தக் கட்சியிலும் இறுதி மூச்சு உள்ளவரை இணையப் போவதில்லை. அடுத்த முறையாவது அறந்தாங்கியில் உதய சூரியன் உதிக்கும் என்ற நம்பிக்கையில், தேர்தல் வரை தி.மு.க உறுப்பினராகவே, த.வெ.க-வுக்குப் பிரசாரம் செய்யவிருக்கிறேன்” என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தி.மு.க  நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “அறந்தாங்கி தொகுதியை உதயசூரியனுக்கு ஒதுக்காதது மிகப்பெரிய வருத்தம் தான். இந்த முறை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டால் தோல்வி உறுதி என்று சர்வே முடிகளில் தெரிந்த போதும், தி.மு.க தலைமை அவருக்கே சீட் கொடுத்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. தொண்டர்கள் பலர் முழுமனதுடன் வேலை செய்ய தயாராக இல்லை. ஆனாலும், தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, கூட்டணிக் கட்சியை வெற்றி பெற வைப்பதுதான் வேலை. கட்டாயத்தின் பேரில் ராமச்சந்திரனுக்கு ஆதரவு பிரசாரத்தை செய்ய இருக்கிறோம்.” என்றனர்.

திருநாவுக்கரவு - ராமச்சந்திரன்
திருநாவுக்கரவு – ராமச்சந்திரன்

தொகுதி கூட்டணிக் கட்சியினரின் எதிர்ப்பு  நிலை குறித்து ராமச்சந்திரனிடம் பேசினோம், “கூட்டணிக்குள் கட்சிகள் எல்லாம் தங்களுக்கு இந்த தொகுதியைக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அறந்தாங்கியை நாங்கள் கேட்டோம். கட்சித் தலைவர்கள் கலந்து பேசி தொகுதியை இறுதி செய்திருக்கிறார்கள்.
தி.மு.க-விற்கு ஒதுக்கப்படாததால் சிலருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், அதையெல்லாம் மறந்து, தி.மு.க-வினர் ஒற்றுமையாக இருந்து கூட்டணிக்காக வேலை செய்வார்கள் என நம்புகிறேன். சிலர் எனக்கு எதிராக பிரசாரம் செய்வதாகச் சொல்கிறார்கள். அதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அது என் வெற்றியையும் பாதிக்காது. அறந்தாங்கியில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு சாலைப் பணிகள் நடந்திருக்கிறது.

குடிநீர்ப் பிரச்னையைப் போக்க அறந்தாங்கிக்கு மட்டும் ரூ.1,800 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்திருக்கிறது. ரூ.17 கோடியில் ஐ.டி.ஐ கல்லூரி, மாவட்டத் தலைமை மருத்துவமனைக் கட்டடம், ரூ.3 கோடி மதிப்பீட்டில் முத்துக்குடா சுற்றுலாத்தளம், அனைத்துப் பஞ்சாயத்திலும் எம்.எல்.ஏ நிதியில் அங்காடி, வகுப்புறைகள் எனக் கட்டடங்கள், ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறந்தாங்கிக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

சென்னைக்குப் போகும்போதெல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்து அறந்தாங்கி வளர்ச்சிக்கான திட்டங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். திட்டங்கள் செயல்படுத்தும்போது கூட்டணிக் கட்சியினர் யாரையும் ஒதுக்குவதில்லை. அழைப்பு கொடுத்திடுவோம். 2024 தேர்தலில் நவாஸ்கனிக்கு  ஓட்டு கேட்டு பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட்டேன். கமிஷன், கலெக்ஷன்க்கு இடமே இல்லை. அப்பாவும் சரி, நானும் சரி கான்ட்ராக்ட் விஷயத்தில் தலையிடுவதில்லை. கடந்த 5 வருடங்களாகத் தொகுதிக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலை செய்திருக்கிறேன்.” என்றார்.

தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜ.க-விற்கு இடையே போட்டி நிலவுகிறது. த.வெ.க சார்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ் போட்டியிடுகிறார். தொகுதியில் பெரும்பங்கு வகிக்கும் இஸ்லாமியர், கிறித்தவர், தலித் மக்களின் பெரும்பான்மை ஓட்டு பர்வேஸ்க்கு சாதகமாக மாறுவதால், கடந்த முறை 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராமச்சந்திரனுக்கு இந்த முறை, களம் சற்று சவாலானதாகவே இருக்கும் என்கிறார்கள்!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *