Sorting by

×

ஆதிக்க சக்திகளின் அழுத்தம்

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக் குழுவின் சேர்மனாக இருப்பவர் அகரம்சேரி சுரேஷ்குமார். தி.மு.க-வில், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் கட்சிப் பணியாற்றிவந்த சுரேஷ்குமார் நேற்றைய தினம் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அதில், “சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றியச் செயலாளர் பொறுப்பினை தொடர முடியாத காரணங்களினால், அப்பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். சேர்மன் சுரேஷ்குமார் குறிப்பிடும் அந்த ஆதிக்க சக்தி, தற்போதைய ஆம்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான அ.செ.வில்வநாதன் தான் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

ஜூனியர் விகடன் கட்டுரை

கடந்த 30-11-2025 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், “கக்கூஸ் கட்டுவதில்கூட தலையிடுகிறார்… `ஹிட்லரிச’ மனோபாவத்தில் அசிங்கப்படுத்துகிறார்..! – தி.மு.க எம்.எல்.ஏ-மீது, ஒன்றிய சேர்மன் காட்டம்!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், எம்.எல்.ஏ வில்வநாதன் குறித்து சுரேஷ்குமார் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். வில்வநாதனுக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதல்வர் வரை முறைகேடு புகார் மனுக்களையும் அனுப்பியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வில்வநாதனும் பதிலளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்துதான் சுரேஷ்குமாரை ஒரே அடியாக ஓரங்கட்டும் முயற்சியில் தீவிர உள்ளடி வேலைப் பார்த்ததாகவும் வில்வநாதன் மீது உடன்பிறப்புகளே கொந்தளிக்கின்றனர். 1996-ல் வேலூர் எம்.பி-யாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்த ப.சண்முகத்தின் மகன்தான் சேர்மன் சுரேஷ்குமார். கட்சிக்குள் தனக்குப் போட்டியாக சுரேஷ்குமார் வளர்வதை வில்வநாதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எ.வ.வேலு மூலமாக குடைச்சல் கொடுத்ததால், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சுரேஷ்குமார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

வில்வநாதன் – சுரேஷ்குமார்

ராஜினாமா பற்றி சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகாலமாகவே, சேர்மன் பதவியிலும் என்னை செயல்படவிடாமல் முடக்கி வைத்தார்கள். என்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றிய நிர்வாகத்தில் வில்வநாதனே அதிகாரம் செலுத்தி வருகிறார். மூன்றாவது தலைமுறையாக தி.மு.க-வில் பயணித்தபோதும், என்னை நிராகரித்துவிட்டனர்’’ என்றார் ஆதங்கமாக.

அதேபோல, பல்வேறு விவகாரங்கள் வில்வநாதனுக்கு எதிராக புயலடிக்கின்றன. தேர்தல் நேரத்தில் உட்கட்சி விவகாரங்கள் ஒவ்வொன்றாக வில்வநாதனுக்கு எதிராக வெடிப்பதால், ஆம்பூர் தொகுதியில் தி.மு.க அடிசறுக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *