சென்னை திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் அ.தி.மு.க மாணவர் அணியில் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் குப்பன் போட்டியிடுகிறார். இவர், கே.சி.பி சாலை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோகுல கிருஷ்ணன் மற்றும் சிலர் வேட்பாளர் குப்பனுக்கு மாலை அணிவிக்க பிரசார வாகனத்தில் ஏறியிருக்கிறார். அதை வேட்பாளர் குப்பனின் மகனும் கவுன்சிலருமான கார்த்திக் உள்பட சிலர் தடுத்திருக்கிறார். இதில் கோகுலகிருஷ்ணன் தரப்புக்கும் கார்த்திக் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே கைகலப்பாகவும் மாறியிருக்கிறது. இதில் காயமடைந்த கோகுல கிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையிலிருந்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவொற்றியூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த கோகுல கிருஷ்ணனிடம் விசாரித்தனர். விசாரணையில் பிரசார வாகனத்தில் ஏறி வேட்பாளருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது வேட்பாளரின் மகன் கார்த்திக், `நீ எதற்காக வண்டியில் ஏறுகிறாய்?’ எனக் கேட்டு தன்னை கீழே தள்ளி விட்டதும் அவருடன் இருந்தவர்கள் கையால் தாக்கியதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வினரிடையே நடந்த மோதல் சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
