Sorting by

×

நான்கு முனை போட்டியால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று நெல்லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது அந்த மாதிரி இருக்கு அவர்களின் கூட்டணி நிலைமை. பணம் கொடுத்து காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க தன்னுடன் வைத்துக்கொண்டது. ஆனால் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் நிற்கிறது.” எனப் பேசியிருந்தார்.

TVK Vijay
TVK Vijay

தவெக தலைவர் விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து கண்டனம் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதன் அமைப்புச் செயலாளர் ராம் மோகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை நடைபெற்றக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் என்பது நூற்றாண்டு பாரம்பரியமும், இந்திய சுதந்திரத்திற்காக தியாக வரலாறும் கொண்ட ஒரு ஜனநாயக இயக்கமாகும். இந்தக் கட்சியை பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் யாராலும் ‘கட்டுப்படுத்த’ முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, அதன் கொள்கைகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் ஏற்ப செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு த.வெ.க. எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை என்று புரியாத நிலையில் அந்த முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன. தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க.வை கொள்கை எதிரியாகவும் அறிவித்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு கொள்கை எதிரி என்று அறிவிக்கப்பட்ட பா.ஜ.க.வை எதிர்த்து எந்தவித கருத்தும் கூற துணிவற்ற நிலையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தி.மு.க.வோடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொள்கை கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. 2019, 2021, 2024 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில், த.வெ.க.வோடு எந்த வகையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆனால், காங்கிரசில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க. விற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவதை விட ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. எனவே, காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

தமிழ்நாட்டில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கூட்டணி, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதமாக த.வெ.க. தலைவர் விஜய் அவதூறு கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். ‘உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது” எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, அரசியல் நாகரீகத்திற்கும் எதிரானதாகும். எனவே, இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *